Skip to main content

முதல் குறி குடியரசு தலைவர் தேர்தல் - காய் நகர்த்தும் சந்திரசேகர ராவ்!

Published on 22/02/2022 | Edited on 22/02/2022

 

chandrasekar rao

 

2024 ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இப்போதிலிருந்தே அத்தேர்தலுக்கு எதிர்க்கட்சிகள் தயாராகி வருகின்றன. இந்தநிலையில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், மஹாராஷ்ட்ரா முதல்வர் உத்தவ் தாக்கரேவையும், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரையும் சந்தித்து பேசினார்.

 

இந்த சந்திப்பின்போது, 2024 ஆம் தேர்தலில் மக்களவை தேர்தலை எதிர்கொள்ள எதிர்கட்சிகளை ஒன்றிணைப்பது பற்றி மட்டுமின்றி, ஜுலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நடைபெறும் குடியரசு தலைவர் மற்றும் குடியரசு துணை தலைவர் தேர்தலில் எதிர்கட்சிகளை ஒன்றிணைத்து பாஜக சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர்களை தோற்கடிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 

தற்போதைய நிலையில் குடியரசு தலைவர் மற்றும் குடியரசு துணை தலைவர் தேர்தல் நடைபெற்றால், பாஜக எளிதில் வெல்லும் என்ற சூழலில், உத்தரப்பிரதேசம் மற்றும் பஞ்சாப் சட்டமன்ற தேர்தல்களில் பாஜக தோல்வியடையும் எனவும், அப்போது எதிர்கட்சிகளின் கூட்டணி பலம்பெறும் என சந்திரசேகர ராவ் கருதுவதகாவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 

கடந்த குடியரசு தலைவர் தேர்தலில் தெலங்கானா ராஷ்டிர சமிதி, பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளரை ஆதரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மக்களவைத் தேர்தல்; 2ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Lok Sabha elections 2nd Phase voting has started

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது.

இதனையடுத்து நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அதாவது கர்நாடகா, ராஜஸ்தான், அசாம், பீகார், கேரளா மற்றும் மணிப்பூர் உள்ளிட்ட 13 மாநிலங்களில் உள்ள 88 தொகுதிகளில் இன்று 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இந்த வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. 2ஆம் கட்ட தேர்தலில் சுமார் 15.88 கோடி பொதுமக்கள் வாக்களிக்க உள்ளனர். இதற்காக பொதுமக்கள் காலை முதல் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

அதன்படி சத்தீஸ்கர் மாநிலத்தில் 3 நாடாளுமன்றத் தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மேற்கு வங்கத்தில் மொத்தம் உள்ள உள்ள 42 தொகுதிகளில் 3 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார் மாநிலங்களில் தலா 5 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. கேரளாவில் உள்ள 20 தொகுதிகளிலும் இன்று வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. அதே போன்று மகாராஷ்டிராவில் 8 தொகுதிகளுக்கும், மத்திய பிரதேசத்தில் 6 தொகுதிகளுக்கும், ஜம்மு - காஷ்மீரில் ஒரு தொகுதிக்கும் என வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள பெங்களூரு தெற்கு, ஹாசன், தட்சிண கன்னடா, மைசூரு, மாண்டியா உள்ளிட்ட 14 தொகுதிகளில் இன்று மாலை வரை 144 தடை அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story

“வாக்காளர்கள் கவனத்திற்கு...” - சத்யபிரதா சாகு முக்கிய தகவல்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
“Attention Voters...” - Satyapratha Sahu Important Information

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “தமிழ்நாட்டில் உள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 6.32 கோடி ஆகும். இதில் முதல் தலைமுறை வாக்காளர்களின் எண்ணிக்கை 10.92 லட்சம் ஆகும். 80 வயதிற்கு மேல் உள்ள வாக்காளர்கள் 6 லட்சத்து 14 ஆயிரத்து 2 பேர் ஆவர். ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை 3.06 கோடியும், பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 3.17 கோடியும், திருநர் வாக்காளர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 467 ஆகும்.

தமிழ்நாட்டில் மொத்தம் 68 ஆயிரத்து 321 வாக்கு சாவடி மையங்கள் உள்ளன. மொத்த வாக்குச்சாவடிகளில் 44 ஆயிரத்து 800 வாக்குச்சாவடிகள் (65 சதவிகிதம்) வெப் காஸ்டிங் முறையில் நேரடியாக தேர்தல் ஆணையத்தின் மூலம் கண்காணிக்கப்பட உள்ளன. 3.32 லட்சம் பணியாளர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ளனர். தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட காவலர்களும், கேரளா மற்றும் ஆந்திராவை சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்களும் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். 

“Attention Voters...” - Satyapratha Sahu Important Information

காலை 7 மணி முதல் மாலை 6 வரை வாக்குப்பதிவு நடைபெறும். மாலை 6 மணியிலிருந்து வரிசையில் நிற்பவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு அனைவரும் வாக்களிக்க ஏதுவாக நடவடிக்கை எடுக்கப்படும். அதாவது மாலை 6 மணிக்குள் வரிசையில் வந்து நிற்பவர்கள் வாக்களிக்கலாம். கடைசி வாக்காளர் வாக்களிக்கும் வரை முழுமையாக வாய்ப்பு வழங்கப்படும். தமிழகத்தின் 39 தொகுதிகளில் போட்டியிடும் மொத்த வேட்பாளர்கள் எண்ணிக்கை 950 ஆகும். இதில் ஆண் வேட்பாளர்கள் 874 பேரும், பெண் வேட்பாளர்கள் 76 பேரும் ஆவர்.

வாக்குச்சாவடி வளாகத்திற்குள் செல்போன் எடுத்துச் செல்லலாம். ஆனால் வாக்குச்சாவடிக்கு உள்ளே செல்போன் அனுமதிக்கப்படாது. வாக்காளர் அடையாள அட்டை இல்லாவிட்டாலும் ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், வங்கி கணக்கு புத்தகம், மருத்துவ காப்பீட்டு அட்டை, பான் கார்டு, பாஸ்போர்ட் உள்ளிட்ட 13 வகையான அரசு ஆவணங்களை பயன்படுத்தி வாக்களிக்கலாம். மாற்றுத்திறனாளிகள், முதியோர் மற்றும் கர்ப்பிணிகள் வாக்களிக்க ஏதுவாக வசதிகள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி மாற்றுத்திறனாளிகள், முதியோர், கர்ப்பிணிகள் உள்ளிட்டோர் 1950 என்ற எண்ணுக்கு அழைத்தால் வாக்களிக்க இலவசமாக வாகனம் அனுப்பி வைக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.