Advertisment

“இந்தி நமது தேசிய மொழி” - சர்ச்சைக்கு மத்தியில் சந்திரபாபு நாயுடு புதிய கருத்து!

Chandrababu Naidu's comment amid language controversy

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில் முக்கிய அம்சமான மும்மொழி கொள்கை, தமிழ்நாட்டிற்கு ஏற்புடையதல்ல என்று கூறி தமிழக அரசியல் தலைவர்கள் அந்த திட்டத்தை எதிர்த்து வருகின்றனர். மேலும், மத்திய பா.ஜ.க அரசு மும்மொழி கல்விக் கொள்கை என்று கூறி மறைமுகமாக இந்தியை தமிழ்நாட்டிற்குள் திணிக்க முயற்சி செய்கிறது என்று தமிழகத்தில் தொடர்ந்து எதிர்ப்பு குரல் வந்து கொண்டே இருக்கிறது.

Advertisment

அதே சமயம் தாய்மொழி, ஆங்கிலம் மற்றும் ஏதேனும் மூன்றாவது மொழியை கற்றுக்கொண்டால் மாணவர்களின் அறிவு வளர்ச்சிக் கூடும் என்று பா.ஜ.கவினர் தொடர்ந்து கூறி வருகின்றனர். அது மட்டுமல்லாமல், தமிழ்நாட்டில் தேசியக் கல்விக் கொள்கையை அமல்படுத்தினால் தான். கல்வி தொடர்பான நிதியை தமிழகத்திற்கு ஒதுக்கப்படும் என்று ஒன்றிய பா.ஜ.க அரசு கட்டாயப்படுத்தி வருகிறது. இதனால், தமிழ்நாடு அரசுக்கும், ஒன்றிய பா.ஜ.க அரசுக்கும் இடையே மொழி தொடர்பான மோதல் போக்கு உருவாகி வருகிறது. இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

Advertisment

இந்த சூழலில், பல அரசியல் தலைவர்கள் மும்மொழி கொள்கை குறித்து பல்வேறு கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் நடிகரும், ஆந்திரப் பிரதேச துணை முதல்வருமான பவன் கல்யாண், இந்த விவகாரம் குறித்து தமிழக அரசைக் கடுமையாக விமர்சித்திருந்தார்.

இந்த நிலையில், ஆந்திரப் பிரதேச முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு, மும்மொழி கொள்கை தொடர்பாக கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். இது குறித்து ஆந்திரா சட்டப்பேரவையில்பேசிய அவர், “ஆங்கிலம் என்பது வெறும் தொடர்புக்கான மொழி. உலகளவில், தங்கள் தாய்மொழியில் படித்து வெற்றி பெற்றவர்கள் தான் எண்ணிக்கையில் அதிகமாக இருக்கின்றனர். மொழிகள் வெறுப்புக்குக் காரணமாக இருக்கக்கூடாது. நமது தாய்மொழி தெலுங்கு, இந்தி நமது தேசிய மொழி, ஆங்கிலம் ஒரு சர்வதேச மொழி. நமது மக்கள் ஜப்பான், ஜெர்மனி போன்ற நாடுகளுக்குச் செல்கிறார்கள், தேவைப்பட்டால், அந்த நாடுகளில் தங்களை நிலைநிறுத்திக் கொள்வது எளிதாகும் வகையில், அந்த மொழிகளை முன்கூட்டியே கற்றுக்கொள்ள வேண்டும். பிற மொழிகளைக் கற்கும் போது நம் தாய்மொழியை மறந்துவிடக் கூடாது. டெல்லிக்குச் சென்றால், இந்தி தெரிந்தால் தொடர்பு எளிதாகும். பல மொழிகளைக் கற்றுக்கொள்வது வேலைவாய்ப்புக்கு நன்மை பயக்கும். இந்தப் பிரச்சினையில் தேவையற்ற அரசியலில் ஈடுபடுவது சரியல்ல” எனத் தெரிவித்துள்ளார். இந்தியாவில் தேசிய மொழி என எதுவும் இல்லாத நிலையில், இந்தி தான் நமது தேசிய மொழி என்று ஆந்திரப் பிரதேச முதல்வர் கூறியிருப்பது விவாதப் பொருளாக மாறியுள்ளது.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe