வாக்கெடுப்பில் முறைகேடு புகார்; சண்டிகர் மேயர் திடீர் ராஜினாமா!

Chandigarh Municipal Corporation Mayor Manoj Sonkar resigns

சண்டிகர் மாநகராட்சி மேயர், மூத்த மேயர், துணை மேயர் ஆகிய பதவிகளுக்கான வாக்குப்பதிவு, பஞ்சாப் மற்றும் ஹரியானா நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி கடந்த 30-01-2024 அன்று நடைபெற்றது. இந்தத் தேர்தலில், இந்தியா கூட்டணி சார்பில் ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சியும் இணைந்து பா.ஜ.க.வை எதிர்த்துப் போட்டியிட்டன. அதன்படி, ஆம் ஆத்மியை சேர்ந்த குல்தீப் குமாரும், பா.ஜ.க.வை சேர்ந்த மனோஜ் சோங்கரும் மேயர் பதவிக்கு போட்டியிட்டனர். மேலும், மூத்த துணை மேயர் பதவிக்கு காங்கிரஸ் கட்சியின் குர்பிரீத் சிங்கும், பா.ஜ.க.வைச் சேர்ந்த குல்ஜீத் சந்தும் போட்டியிட்டனர். துணை மேயர் பதவிக்கு காங்கிரஸ் வேட்பாளர் நிர்மலா தேவியை எதிர்த்து பா.ஜ.க சார்பில் ராஜிந்தர் சர்மா போட்டியிட்டார்.

அன்றைய தினம் காலை வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், பிற்பகல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டன. அதில் மொத்தமுள்ள 36 ஓட்டுகளில், 16 ஓட்டுகள் பெற்று பா.ஜ.க வேட்பாளர் மனோஜ் சோங்கர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். மேலும், இதில் ஆம் ஆத்மி மேயர் வேட்பாளர் குல்தீப் குமாருக்கு கிடைத்த 20 வாக்குகளில் 8 வாக்குகள் செல்லாதவை எனவும் அறிவிக்கப்பட்டன. இதனையடுத்து, பா.ஜ.க குறுக்கு வழியில் வெற்றி பெற்றதாக ஆம் ஆத்மி கடுமையாக விமர்சனம் செய்து குற்றம்சாட்டியது. அதனைத் தொடர்ந்து சண்டிகர் மேயர் தேர்தல் முடிவை எதிர்த்து நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் வீடியோ ஆதாரங்களுடன் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கில் பல்வேறு கேள்விகளை உச்சநீதிமன்றம் எழுப்பி இருந்தது.

அதில், ‘தேர்தலை நடத்தும் விதம் இதுதானா? தேர்தல் என்ற பெயரில் அங்கு நடந்த செயல் ஜனநாயகத்தை கேலிக்கூத்தாகும் செயல். வாக்கு சீட்டுகளை தேர்தல் அதிகாரி திருத்தி தில்லுமுல்லு செய்தது வெளிப்படையாகத் தெரிகிறது. ஜனநாயகத்தை படுகொலை செய்வதை அனுமதிக்க முடியாது. சண்டிகர் மேயர் தேர்தலில் ஜனநாயகப் படுகொலை நடந்திருப்பதைப் பார்த்து மிகவும் வேதனைப்படுகிறோம். தேர்தல் அதிகாரி மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேயர் தேர்தலை நடத்திய தேர்தல் அதிகாரிக்கு கடும் கண்டனம். மாநகராட்சி மன்றக் கூட்டத்தை ஒத்தி வைக்க வேண்டும்’என உத்தரவிட்டு வழக்கை உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்திருந்தது. இந்த சூழலில் இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. இந்நிலையில் சண்டிகர் மேயர் மனோஜ் சோன்கர் தனது பதவியை நேற்று நள்ளிரவு திடீரென ராஜினாமா செய்துள்ளார்.

chandigarh mayor
இதையும் படியுங்கள்
Subscribe