சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த வயதான தம்பதிகளிடம் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் செயின் பறிப்பில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் விஜயநகர் பகுதியில் வயதான தம்பதிகள் இருவர் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிர்புறமாக இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இருவர் மூதாட்டியின் கழுத்திலிருந்த 4 சவரன் செயினை பறித்துக்கொண்டு சென்றனர். இதனால் நிலைதடுமாறி மூதாட்டி கீழே விழுந்தார். அக்கம்பக்கத்திலிருந்தவர்கள் உடனடியாக மூதாட்டியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்நிலையில் மூதாட்டியிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. இந்த காட்சியின் அடிப்படையில் போலீசார் விசாரணை செய்து இருவரையும் தேடி வருகின்றனர்.