Skip to main content

இது தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது - சென்ட்ரல் விஸ்டா பணிகளை தடை செய்ய நீதிமன்றம் மறுப்பு!

Published on 31/05/2021 | Edited on 31/05/2021

 

central vista

 

மத்திய அரசு, இந்தியத் தலைநகர் டெல்லியில் சென்ட்ரல் விஸ்டா என்ற திட்டத்தைச் செயல்படுத்திவருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், புதிய பாராளுமன்றக் கட்டடம் அமைக்கும் பணிகளும், பிரதமர் இல்லம், குடியரசுத் துணைத் தலைவருக்கான இல்லம் ஆகியவற்றை அமைக்கும் பணிகளும் நடைபெற்றுவருகின்றன. மேலும், மத்திய அமைச்சர்களுக்கான அலுவலகங்கள், பொது மத்திய செயலகங்கள் ஆகியவை அமைக்கும் பணிகளும் நடக்க இருக்கின்றன.

 

கரோனா பரவல் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவரும் நிலையில், ஆயிரக்கணக்கான கோடி செலவில் சென்ட்ரல் விஸ்டா திட்டம் செயல்படுத்தப்படுவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்துவருகின்றனர். இந்தநிலையில், சென்ட்ரல் விஸ்டா திட்டம் அத்தியாவசியமான ஒன்றல்ல என்றும், கரோனா இரண்டாவது அலை ஏற்பட்டுள்ள நிலையில், கட்டுமானப் பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்கள் மற்றும் அப்பகுதியில் வசிக்கும் குடிமக்கள் நலன் கருதி, சென்ட்ரல் விஸ்டா திட்ட கட்டுமானப் பணிகளுக்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

 

இந்தநிலையில் இன்று (31.05.2021) இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், சென்ட்ரல் விஸ்டா திட்டம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது என கூறியதோடு, கட்டுமானப் பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள் அங்கேயே தங்கியிருப்பதாலும், கரோனா விதிமுறைகள் பின்பற்றப்படுவதாலும் கட்டுமானப் பணிகளுக்குத் தடை விதிக்க எந்தக் காரணமும் இல்லை என தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தது.

 

மேலும், இந்த மனு உள்நோக்கத்தோடு தாக்கல் செய்யப்பட்டதாக கூறிய டெல்லி உயர் நீதிமன்றம், மனுதாரர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்ததும் உத்தரவிட்டது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கெஜ்ரிவாலை பதவி நீக்கக் கோரும் மனு; உயர் நீதிமன்றம் அதிரடி! 

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
Petition seeking impeachment of Kejriwal; High Court action

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும், அவர் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். இது தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த மார்ச் மாதம் 21 ஆம் தேதி (21.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாதென உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. மேலும் முன் ஜாமீன் வழங்கவும் டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்திருந்தது.

இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டிற்கு அன்றைய தினமே (21.03.2024) 12 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் வருகை தந்து அரவிந்த கெஜ்ரிவாலிடம் விசாரணையும், அவரது வீட்டில் சோதனையும் மேற்கொண்டனர். அதன் பின்னர் அமலாக்கத்துறையால் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். மேலும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

இதற்கிடையே அரவிந்த் ஜெஜ்ரிவாலை டெல்லி முதலமைச்சர் பதவியில் இருந்து நீக்கக் கோரி இந்து சேனா என்ற அமைப்பின் தேசிய தலைவர் விஷ்னு குப்தா என்பவர் சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. 

Next Story

நாடாளுமன்றக் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு; பா.ஜ.க. எம்.பி.களுக்கு முக்கிய உத்தரவு!

Published on 10/02/2024 | Edited on 10/02/2024
Parliament session ends today Important order for BJP MPs

இந்த ஆண்டிற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மாதம் 31 ஆம் தேதி தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடரான பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் நாளான கடந்த 31 ஆம் தேதி அன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் உரையுடன் தொடங்கியது. இதனையடுத்து நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் நாளான கடந்த 1 ஆம் தேதி மத்திய அரசின் 2024 - 2025 ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், “கடந்த 10 ஆண்டுகளில் மத்திய அரசின் செயல்பாடுகளால் நாடு அடைந்துள்ள வளர்ச்சி குறித்து நடப்பு கூட்டத் தொடரிலேயே வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையில் இந்த கூட்டத் தொடர் பிப்ரவரி 9 ஆம் தேதி வரை நடைபெறும் எனக் கூறப்பட்ட நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் மக்களவை அமர்வு முக்கிய காரணங்களுக்காக மேலும் ஒரு நாள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது. அதன்படி பிப்ரவரி 10 ஆம் தேதி, சனிக்கிழமையான இன்று மக்களவை நடைபெறும் என அறிவிப்பு வெளியாகி இருந்தது. இதனையடுத்து, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இரு அவைகளிலும், மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்து வெள்ளை அறிக்கையை நேற்று முன்தினம் (08.02.2024) தாக்கல் செய்திருந்தார். அதனைத் தொடர்ந்து, வெள்ளை அறிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.

இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக நடைபெறும் கடைசி நாடாளுமன்றக் கூட்டத்தொடர் இன்றுடன் (10.02.2024) நிறைவடைகிறது. வழக்கமாக சனிக்கிழமைகளில் நாடாளுமன்ற அலுவல்கள் நடக்காத நிலையில் இன்று நாடாளுமன்றக் கூட்டத்தொடர் கூடவுள்ளதால் மக்கள் மத்தில் எதிர்பார்ப்பு அதிகாரித்துள்ளது. அதே சமயம் நாடாளுமன்றத்தில் அயோத்தி ராமர் கோயில் தொடர்பாக விவாதிக்கப்பட வாய்ப்பு எனவும் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக நாடாளுமன்ற பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இன்று அவைக்கு வர தலைமை கொறடா உத்தரவிட்டிருந்தார். அந்த உத்தரவில் ‘நாடாளுமன்றத்தில் முக்கிய அலுவல் இருப்பதால் கட்டாயம் அவைக்கு வர வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.