Skip to main content

“திருமணம் கொள்கை சார்ந்த விஷயம்” - மத்திய அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ

Published on 14/03/2023 | Edited on 14/03/2023

 

central law minister kiren rijiju Institution of marriage a matter of policy

 

2018 ஆம் ஆண்டில் தன்பாலின ஈர்ப்பில் காதல் என்பது குற்றமற்றது என உச்சநீதிமன்றம் அறிவித்திருந்தது. இருப்பினும், தன்பாலின திருமணம் என்பது இந்தியாவில் தற்போது வரை சட்டமாகவில்லை. இந்நிலையில், சிறப்பு திருமண சான்றிதழின் கீழ் தங்களது திருமணத்தை அனுமதிக்க உரிய உத்தரவு பிறப்பிக்கக் கோரி தன்பாலின ஜோடி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். உச்சநீதிமன்றம் இந்த வழக்கை விசாரிக்க ஏற்றுக்கொண்டதோடு மட்டுமல்லாமல் பிற உயர்நீதிமன்றங்களிலும் நிலுவையில் உள்ள தன்பாலின ஈர்ப்பு திருமண வழக்குகளை விசாரிக்க முடிவு செய்தது. தொடர்ந்து தன்பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக அங்கீகரிப்பது குறித்து விளக்கமளிக்கவும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. 

 

“தன்பாலின திருமணம் என்பது இந்திய குடும்ப அமைப்பு என்ற கருத்துடன் ஒத்துப் போகாது. இந்திய குடும்ப அமைப்பு என்பது கணவன், மனைவி மற்றும் குழந்தைகளை உள்ளடக்கியது. இந்திய குடும்ப அமைப்பில் ஆண், பெண் என உயிரியல் வேறுபாடுகள் கொண்ட இருவர் திருமண ஒப்பந்தம் செய்து கொண்டு குழந்தை பெற்றுக்கொள்வதே சிவில் சமூகம். தன்பாலின ஈர்ப்பாளர்களை குடும்ப அமைப்புடன் ஒப்பிடக்கூடாது. அரசியலமைப்புச் சட்டம் 19ன் படி குடிமக்கள் சேர்ந்து வாழத் தடையில்லை. அதே நேரத்தில் சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்குவது பற்றி அரசு தான் தெரிவிக்கும். குடும்ப வன்முறை பாதுகாப்பு சட்டத்தில் தன்பாலின ஈர்ப்பாளர்களை சேர்க்க இயலாது. தன்பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக்கக் கூடாது” என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் பதிலளித்தது. 

 

இதனைத் தொடர்ந்து இந்த வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட சட்ட அமர்வுக்கு மாற்றியதோடு, வழக்கின் விசாரணை ஏப்ரல் 18 ஆம் தேதி தொடங்கும் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜூவிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “யாருடைய தனிப்பட்ட சுதந்திரத்திலோ அல்லது செயல்பாடுகளிலோ மத்திய அரசு தலையிடாது. தனிநபர்களின் செயல்பாடுகளில் மத்திய அரசு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. அதனால் குழப்பம் வேண்டாம். ஆனால், திருமண முறை என்பது வேறு, அது கொள்கை சார்ந்த விஷயம். இவ்விரண்டும் முற்றிலும் வேறுபட்டவை” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விவேக் இல்லத் திருமணம்; அப்பாவின் கனவை நோக்கி மகள்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
vivek daughter marriage

பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் கடந்த 2021 ஆம் ஆண்டு உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு மூன்று குழந்தைகள் இருந்தன. பிரசன்னா குமார், அமிர்த நந்தினி மற்றும் தேஜஸ்வனி. இதில் பிரசன்னா குமார், மூளைக் காய்ச்சல் காரணமாக 2015 ஆம் ஆண்டு உயிரிழந்தார்.

இந்த நிலையில், மறைந்த விவேக்கின் மூத்த மகளான தேஜஸ்வினிக்கு தற்போது திருமணம் நடைபெற்றுள்ளது. பரத் என்பவரைத் திருமணம் செய்து கொண்ட நிலையில், திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். 

அப்போது மணமக்கள் இருவரும் மரக்கன்றுகள் மற்றும் மூலிகை பூச்செடிகள் நட்டனர். பின்பு வாழ்த்தியவர்களுக்கு மரக்கன்றை பரிசாக அளித்தனர். விவேக், முன்னாள் குடியரசுத் தலைவர் மறைந்த ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் வழியில் கிரீன் கலாம் என்ற திட்டத்தின் மூலம் 1 கோடி மரக்கன்றுகள் நடுவதை கனவாக வைத்திருந்தார் என்பதும் அதில் லட்சக்கணக்கான மரக்கன்றுகளை நட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.