புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் என்.ஆர். காங்கிரஸ் - பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில் என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் நிறுவனரும், தலைவருமான ரங்கசாமி முதலமைச்சராகப் பதவி வகித்து வருகிறார். சட்டப்பேரவையில் என்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு 10 உறுப்பினர்கள், பா.ஜ.க.வுக்கு 9 உறுப்பினர்கள், தி.மு.க.வுக்கு 6 உறுப்பினர்கள், காங்கிரஸ் கட்சிக்கு 2 உறுப்பினர்கள், 6 சுயேச்சை உறுப்பினர்கள் என மொத்தம் 33 உறுப்பினர்கள் இருந்தனர்.
இதில் 30 பேர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஆவர். மற்ற 3 பேர் நியமன எம்.எல்.ஏ.க்கள் ஆவர். அதன் அடிப்படையில் தான் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு 3 எம்.எல்.ஏ.க்களை மத்திய அரசு நியமித்திருந்தது. இத்தகைய சூழலில் தான் நியமன எம்.எல்.ஏ.க்களான அசோக் குமார், வெங்கடேஷன் மற்றும் ராமலிங்கம் ஆகியோர் கடந்த வாரம் தங்களது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தனர். இதனைத் தொடர்ந்து புதிதாக நியமன எம்.எல்.ஏ.க்களாக 3 பேரை நியமிக்க முடிவு செய்து அது தொடர்பான கோப்புகள் மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்திற்குப் புதுச்சேரி அரசு சார்பில் அனுப்பப்பட்டது.
அதாவது முன்னாள் எம்.எல்.ஏ.வான தீபாய்ந்தான், காரைக்காலைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜசேகரன் (பா.ஜ.க.) மற்றும் இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த செல்வம் ஆகிய 3 பேர் பேரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது. இந்நிலையில் புதுச்சேரிக்கு இந்த 3 பேரை நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவின் அடிப்படையில் வரும் 14ஆம் தேதி பகல் 12 மணிக்கு இவர்கள் 3 பேரும் சபாநாயகர் செல்வத்தின் முன்னிலையில் தங்களது பதவியை ஏற்றுக்கொள்ள உள்ளனர். மற்றொருபுறம் புதுச்சேரியில் அடுத்த ஆண்டு (2026) சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனை எதிர்கொள்ளும் வகையில் அரசியல் கட்சிகள் தீவிரமாகச் செயல்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.