Central govt issues important instructions to state govts for Corona spread

கடந்த 2 வருடங்களுக்கு மேலாகக் கட்டுக்குள் இருந்த கொரோனா தொற்று, நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் உலகம் முழுவதும் பரவி வருகிறது. அதாவது சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில், கடந்த சில வாரங்களாக அதிக அளவில் பரவி வரும் கொரோனா, தற்போது இந்தியாவிலும் வேகமாகப் பரவி வருகிறது. அதிலும் குறிப்பாகக் கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இத்தகைய சூழலில் தான் நாடு முழுவதும், ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள அரசு மருத்துவமனைகள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்திருந்தது.

அதே சமயம் நாடு முழுவதும் ஒட்டுமொத்தமாக 4 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதில், “ஆக்ஸிசன் சிலிண்டர்கள் இருப்பை உறுதி செய்ய வேண்டும், தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகளைத் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். வெண்டிலேட்டர்கள், அத்தியாவசிய மருந்துகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இருமல் மற்றும் சுவாச பிரச்சினைகள் உள்ளவர்கள் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

முன்னதாக சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டுகள் சீரமைக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆண்களுக்கு 4 படுக்கைகள், பெண்களுக்கு 4 படுக்கைகள் என 2 தனித்தனி அறைகள் தயார் நிலையில் உள்ளன. கொரோனாவால் பாதிக்கப்பட்டால் அவர்களை உடனடியாக தனிமைப்படுத்தி அவர்களுக்குத் தேவையான மருத்துவச் சிகிச்சை அளிப்பதற்கான அனைத்து மருந்துகளும் இங்குத் தயாராக வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.