ADVERTISEMENT

அம்பானிக்கு கைமாறும் மத்திய அரசின் அசோகா ஹோட்டல்

08:07 PM Nov 24, 2022 | kalaimohan

- தெ.சு.கவுதமன்

ADVERTISEMENT

ADVERTISEMENT

பிரதமரின் இல்லத்துக்கு மிகவும் அருகிலுள்ள, டெல்லியின் அடையாளங்களில் ஒன்றான அசோக் ஹோட்டல் விற்பனை செய்யப்படவுள்ளது. இந்திய அரசின் சுற்றுலாத்துறைக்குச் சொந்தமான மிகப் பிரமாண்டமான 5 நட்சத்திர அந்தஸ்து கொண்ட அசோக் ஹோட்டலின் விற்பனை விலையாக ரூ.7,409 கோடி ரூபாயை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஹோட்டல் மட்டுமின்றி, இந்திய சுற்றுலாத்துறைக்குச் சொந்தமான மேலும் 7 ஹோட்டல்கள் விற்பனை செய்யப்படவுள்ளன. மேலும், டெல்லியின் மையப்பகுதியில் உள்ள 25 ஏக்கர் பரப்பளவில் உள்ள ஹோட்டல்கள், அடுக்குமாடிக் குடியிருப்புகள், ஷாப்பிங் மால்கள் என அனைத்தையும் தனியாருக்குக் குத்தகைக்கு விட்டு நிதி திரட்டுவதற்கான திட்டமும் பரிசீலனையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

டெல்லியில் ஒரு 5 நட்சத்திர ஆடம்பர ஹோட்டலை வாங்க வேண்டுமென்ற ஆசை முகேஷ் அம்பானிக்கு பல காலமாக இருந்திருக்கிறது. இவர் சமீபத்தில் முதலீடு செய்த ஓபராய் குழுமத்தின் ஹோட்டலை முழுமையாக இவரால் கையகப்படுத்த முடியவில்லை. இச்சூழலில், டெல்லியில் விற்பனை செய்யப்படவுள்ள அசோக் ஹோட்டலை முகேஷ் அம்பானியே வாங்குவாரென்றும் அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. வாஜ்பாய் காலத்திலேயே இந்த ஹோட்டல் விற்பனைக்கு வருவதாக இருந்த சூழலில், அப்போதைய சுற்றுலாத்துறை அமைச்சரான ஜக்மோகன், 'எந்த ஒரு லாபம் ஈட்டும் அரசு நிறுவனத்தையும் விற்க மாட்டோம்' என்ற வாஜ்பாய் அரசின் கொள்கை முடிவைக் காரணம் காட்டி விற்பனையைத் தடுத்துவிட்டார்.

பிரதமர் மோடியின் ஆட்சியில், பொதுத்துறை நிறுவனங்களை விற்று காசாக்குவதிலும் 99 ஆண்டு காலத்துக்கு குத்தகைக்கு விட்டு காசாக்குவதிலும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மிகுந்த அக்கறை காட்டி வருவது அனைவருக்கும் தெரிந்ததே. பொதுத்துறை நிறுவனம் லாபமீட்டுகிறதோ இல்லையோ, விற்பனை செய்வதாக முடிவெடுத்தால் பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை. பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன், ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா, பாரத் எர்த் மூவர் லிமிடெட் உட்பட பல்வேறு பொதுத்துறை நிறுவனங்கள் லாபகரமாக இயங்கியபோதும் தனியாருக்கு விற்பனை செய்யப்பட்டன.

கடந்த 2021, ஆகஸ்ட் மாதத்தில் நடைபெற்ற தேசிய பணமாக்கல் செயல்முறை (NMP) கூட்டத்தில், அடுத்த நான்காண்டு காலத்தில் இந்திய அரசுக்குச் சொந்தமான பொதுத்துறை சொத்துக்களான விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், சாலைகள் மற்றும் துறைமுகங்களை தனியாருக்கு நீண்ட காலக் குத்தகைக்கு விடுவது, விற்பனை செய்வது போன்ற செயல்பாடுகளின் மூலம் அடுத்த 4 ஆண்டுகளில் 6 லட்சம் கோடி ரூபாய் திரட்டுவதற்கு முடிவெடுக்கப்பட்டது.

அதன்படி பொதுத்துறை சொத்துக்களான விமான நிலையங்கள் பலவற்றையும் அதானி குழுமத்துக்கு நீண்டகாலக் குத்தகைக்கு விடும் பணி முடுக்கி விடப்பட்டது. துறைமுகங்களையும் அதானி குழுமம் குத்தகைக்கு வாங்கியது. நீண்டகாலக் குத்தகைக்கு வாங்குவது என்பதே விற்கப்படுவதற்கு சமமெனக் கொள்ளலாம். கடந்த ஆண்டில் ஏர் இந்தியா விமான போக்குவரத்து நிறுவனம், ரூ.18,000 கோடிக்கு டாடா நிறுவனத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. நடப்பு 2022-23 ஆண்டில், இதுவரை 33,422 கோடி ரூபாய் மதிப்பிலான பொதுத்துறை சொத்துக்களைக் காசாக்கியுள்ளது. இதில், நிலக்கரி அமைச்சகத்தின் சுரங்கங்களை விற்பனை செய்ததன் மூலம் மட்டுமே 17,000 கோடி ரூபாய் திரட்டப்பட்டது. அடுத்ததாக, துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சகங்கள் விற்பனைக்கு நிர்ணயித்த இலக்கை எட்டியுள்ளன. இப்படி பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தையும் அம்பானிக்கும் அதானிக்குமாக விற்றுக்கொண்டே சென்றால் பாராளுமன்றம் மட்டும் இருந்து என்ன பிரயோஜனம் என்ற கேள்வியை எதிர்க்கட்சிகள் எழுப்புகின்றன.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT