central government is very dissatisfied for issue of fishermen 

தமிழகம் மற்றும் புதுவைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் சம்பவம் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. அதோடு மீனவர்களின் விசைப் படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும் சூழலும் நிலவி வருகிறது. இந்த துயரச் சம்பவங்களுக்கு இடையே தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்களும் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

Advertisment

இது போன்ற சூழலில், இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவித்திடவும் வலியுறுத்தி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், பிரதமர் மோடி மற்றும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தொடர்ந்து கடிதம் எழுதி வருகிறார். இதற்கிடையே கைது செய்யப்படும் தமிழக மீனவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் நிகழ்வுகளும் தற்போது அரங்கேறி வருகின்றன. அதே சமயம் இலங்கை கடற்படையின் நடவடிக்கைக்கு எதிராக ராமேஸ்வரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் அவ்வப்போது போராட்டம் நடத்தியிருந்தனர்.

Advertisment

இதற்கிடையே கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திடவும், இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு கடந்த 27ஆம் தேதி (27.10.2024) கடிதம் எழுதியிருந்தார். அதில், “இந்திய மீனவர்கள் இலங்கை அதிகாரிகளால் தொடர்ந்து இதுபோன்று கைது செய்யப்படும் சம்பவங்கள் தொடர்ந்து வருகிறது. இத்தகைய கைது நடவடிக்கைகள், இந்தியா - இலங்கை இடையிலேயான ஆக்கப்பூர்வமான தூதரக முயற்சிகளுக்கு அழைப்பு விடுக்கும் ஒரு முக்கியப் பிரச்சினையாக மாறியுள்ளது.

central government is very dissatisfied for issue of fishermen 

மீனவர்கள் இதுபோன்று கைது செய்யப்படுவது, இந்தியாவில், குறிப்பாகத் தமிழ்நாட்டில் உள்ள மீனவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் வாழ்வாதாரம் மற்றும் பாதுகாப்பிற்குக் கடுமையான அச்சுறுத்தலைத் தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறது. இந்த (2024) ஆண்டில் மட்டும் இதுபோன்று 30 சம்பவங்கள் நடந்துள்ளன. கடந்த 27ஆம் தேதி நிலவரப்படி 140 மீனவர்கள் மற்றும் 200 மீன்பிடிப் படகுகள் இலங்கை அரசின் வசம் உள்ளனர். எனவே, இந்தப் பிரச்சினையை முன்னுரிமை அடிப்படையில் எடுத்துச் சென்று, இலங்கை அரசால் கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.

Advertisment

இந்நிலையில் மீனவர்கள் விவகாரம் தொடர்பாக இரு நாட்டு மீனவர்கள் சங்க ஆலோசனைக் கூட்டத்தை நடந்த மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. கொழும்புவில் நடைபெற்ற இரு நாடுகளின் 6வது ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தியுள்ளது. மேலும் இந்த கூட்டத்தில் மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவது, அவர்களுக்குச் சிறைத் தண்டனை விதிப்பது, பறிமுதல் செய்யப்படும் படகுகளுக்கு அபராதம் விதிக்கப்படுவதற்கு இந்தியா சார்பில் கடும் அதிருப்தி தெரிவிக்கப்பட்டது. அதோடு கடலில் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை எந்த சூழலிலும் தாக்குதல் நடத்தக் கூடாது எனவும், மீனவர்கள் விவகாரத்தில் இரு தரப்பும் ஆக்கப்பூர்வ ஆலோசனை நடத்தி நிரந்தர தீர்வு காண வேண்டும் என மத்திய அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டது.