Central Government information 2,200 cases against Hindu people in Bangladesh

வங்கதேசத்தில் இட ஒதுக்கீடு தொடர்பாக வெடித்த போராட்டத்தின் காரணமாக பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்க்கப்பட்டு, நாட்டை விட்டே வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தார். இதையடுத்து, வங்கதேசத்தில் சம்மிலிதா சனாதானி ஜோட் என்ற இந்து அமைப்பின் தலைவராக இருக்கும் சின்மய் கிருஷ்ணா தாஸ், வங்கதேசத்தின் தேசியக் கொடி அவமதித்தாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில், சின்மய் கிருஷ்ண தாஸ் உள்பட 19பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு டாக்கா சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கடந்த நவம்பர் 25ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இவரது கைதுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்திருந்தது.

Advertisment

இதையடுத்து, சின்மய் கிருஷ்ண தாஸுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டதையடுத்து, அவரது ஆதரவாளர்கள் வங்கதேசம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதே வேளையில், வங்கதேசத்தில் சிறுபான்மை மக்களாக இருக்கக்கூடிய இந்து மக்கள் மீது அங்கு தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு இந்தியாவில் உள்ள பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

இந்த நிலையில், வங்கதேசத்தில் உள்ள இந்து மக்களுக்கு எதிராக இந்த ஆண்டு மட்டும் 2,200 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது குறித்த தரவுகளை மாநிலங்களவையில் சமர்பித்த வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்திருப்பதாவது, ‘இந்த சம்பவங்களை அரசாங்கம் தீவிரமாக கருத்தில் எடுத்துக் கொண்டு, வங்கதேச அரசிடம் எங்களது கவலைகளை தெரிவிக்கிறோம். இந்துக்கள் மற்றும் பிற சிறுபான்மையினர்களின் பாதுகாப்பு மற்றும் நலன் ஆகியவற்றை உறுதி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் வங்கதேச அரசு எடுக்கும் என்று இந்தியா எதிர்பார்க்கிறது.

அதே போல், சிறுபான்மை மக்களுக்கு எதிரான வன்முறை, மதவெறி வன்முறை, சிறுபான்மை சமூகங்கள் மீதான தாக்குதல்களைத் தடுக்கவும், அவர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதிப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தான் அரசையும் வலியுறுத்துகிறோம். தகவலின் அடிப்படையில், கடந்த 2022ஆம் ஆண்டு வங்கதேசத்தில் இந்து மக்களுக்கு எதிராக 47 வன்முறை சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டு 302 வன்முறை சம்பங்கள் பதிவாகின. ஆனால், இந்த 2024ஆம் ஆண்டு 2,200 வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளன. பாகிஸ்தானின் 2022இல் 241 வழக்குகளும், 2023இல் 103 வழக்குகளும், 2024ஆம் ஆண்டு 112 வழக்குகளும் இந்துக்களுக்கு எதிராகப் பதிவாகியுள்ளது.

Advertisment

வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானைத் தவிர வேறு எந்த அண்டை நாடுகளிலும் இந்துக்களுக்கு எதிரான வன்முறை வழக்குகள் பதிவாகவில்லை. அதனால், வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளின் அரசாங்கங்கள், தங்கள் நாடுகளில் உள்ள இந்துக்களின் பாதுகாப்பு, நலன் மற்றும் நல்வாழ்வை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.