கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் 5 பேருடன் தனியார் பள்ளி வேன் ஒன்று நேற்று (08.07.2025) காலை ரயில்வே கேட்டை கடக்க முயன்றது. அப்போது விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை நோக்கி வந்த பயணிகள் ரயில் பள்ளி வேன் மீது மோதி தூக்கி வீசப்பட்டது. இந்த விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர். அதாவது 6ஆம் வகுப்பு மாணவன் நிமலேஷ், 11ஆம் வகுப்பு மாணவி சாருமதி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். வேன் ஓட்டுநர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார். அதே சமயம் செழியன் என்ற மாணவன் ஜிப்மர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். 

இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த பள்ளி மாணவர்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து நடந்த பகுதியில் கேட் கீப்பர் அலட்சியமாக இருந்ததால் விபத்து நிகழ்ந்ததாகப் பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். அதே சமயம் சம்பந்தப்பட்ட ரயில்வே கேட்டானது, உள்ளிணைப்பு இல்லாத (Non inderlocking) கேட் என்பதால் அதை மூடுவதற்கு தொலைப்பேசி மூலம் தகவல் அளிக்கப்படும் என்ற நிலையில், ரயில் வரும் நேரத்தில் கேட்டை மூடுவதற்கான தகவல் முறையாக அளிக்கப்பட்டதா அல்லது இல்லையா என்ற சந்தேகம் எழுந்தது. 

இந்த விபத்தில் அலட்சியமாகச் செயல்பட்டதாகக் கேட் கீப்பர் பங்கஜ் சர்மா சஸ்பெண்ட் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். முன்னதாக சம்பந்தப்பட்ட ரயில்வே கேட் பகுதியில் பணியிலிருந்த கேட் கீப்பர் பங்கஜ் சர்மா அலட்சியமாக இருந்ததாகக் கூறி அப்பகுதி மக்கள் அவரை தாக்கினர். இதனால் பங்கஜ் சர்மாவை பத்திரமாக மீட்கப்பட்டு போலீசார் பாதுகாப்பான இடத்தில் வைத்திருந்தனர். அவரிடம் தொடர்ச்சியாக போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் போது பள்ளி வேனை ஓட்டி வந்த சங்கர் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் கேட்டை திறந்ததாக பஞ்சஜ் சர்மா வாக்குமூலம் கொடுத்திருந்தார். 

மற்றொரு புறம்  தீவிர சிகிச்சையில் உள்ள வேன் ஓட்டுநர் சங்கர் இதனை மறுத்திருந்தார். அதாவது ரயில்வே கேட் திறந்து இருந்ததால் ரயில் சென்றிருக்கும் என வேனை முன்னோக்கி இயக்கியதாகவும், ரயில் வருவதற்கான சத்தம் வராததால் வேனை இயக்கியதாகவும் தெரிவித்தார். இத்தகைய சூழலில் தான் இந்த சம்பவம் தொடர்பாக கேட் கீப்பர் பங்கஜ் ஷர்மா மீது சிதம்பரம் ரயில்வே காவல்துறையினர் 5 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதன் தொடர்ச்சியாக அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று  விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவரிடம் திருச்சி கோட்ட பொது மேலாளர் (டிஆர்.எம்) அன்பழகன் நடந்த விஷயம் குறித்துக் கேட்டதாகக் கூறப்படுகிறது.

Advertisment

அதற்கு, “காலையில் 7.05க்கு கேட் மூடப்பட்டது. சுமார் 07.25 வரை  கேட் திறக்கப்படவில்லை. இதனால் அங்குள்ள 2 பகுதியிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் அதனைச் சரிசெய்யக் காலை 07.25க்கு யாரையும் ஆலோசிக்காமல் கேட் திறக்கப்பட்டது” எனத் தெரிவித்தார். இதனையடுத்து சிதம்பரம் குற்றவில்  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் பங்கஜ் சர்மா தொடர்ச்சியாக கேட்டை திறந்து வைத்துவிட்டு தூங்குவதை வாடிக்கையாக கொண்டிருந்தது தெரியவந்துள்ளது. ஸ்டேஷன் மாஸ்டர் ரயில் வருவதை தொலைபேசி மூலம் தெரிவிக்க அழைத்த போதும் அவர் செல்போனை எடுக்கவில்லை என்பதும் தெரியவந்தது. இதுவரை ஐந்துக்கும் மேற்பட்ட முறை பணி நேரத்தில் பங்கஜ் சர்மா கேட்டை மூடாமல் உறங்கியது விசாரணையில் தெரிய வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் இந்திய ரயில்வே துறை 11 வழிகாட்டுதல்கள் கொண்ட நடைமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில், “நாட்டில் உள்ள அனைத்து ரயில்வே கேட்டுகளில் அடுத்த 15 நாட்களுக்கு ஆய்வு செய்ய குழுவும் உருவாக்கப்பட்டுள்ளது. கேட் கீப்பர், ஸ்டேஷன் மாஸ்டர்களின் குரல் பதிவுகளைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். அனைத்து ரயில்வே கேட்டுகளிலும் இண்டர்லாக்கிங் விரைந்து செயல்படுத்த வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.