/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/hjm-h.jpg)
இந்திய வரலாற்றிலேயே மிகப்பெரிய வங்கி மோசடி தொடர்பான விவரங்கள் சிபிஐ விசாரணையில் தற்போது அம்பலமாகியுள்ளன.
மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஏபிஜி ஷிப்யார்டு (ABG Shipyard) நிறுவனம் கப்பல் கட்டுதல் மற்றும் கப்பல் பழுதுபார்க்கும் தொழிலில் கடந்த 16 ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறது. மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் செயல்பட்டு வரும் இந்நிறுவனம் வங்கியில் பெற்ற கடன்கள் மூலம் ரூ. 22,842 கோடி மோசடி செய்துள்ளதாக சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.
பல ஆயிரம் கோடி மதிப்பிலான வர்த்தகத்தை மேற்கொண்டுவரும் இந்நிறுவனத்தின் மீது நவம்பர் 8, 2019 அன்று வங்கிகள் சார்பாக சிபிஐ -யில் மோசடி புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில், மார்ச் 12, 2020 அன்று சிபிஐ அந்நிறுவனத்திடம் விளக்கம் கேட்டது. அதன்பிறகு 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வங்கிகள் சார்பாக இதே மோசடி தொடர்பாக ஒரு புதிய புகார் கொடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக நிறுவனத்தின் வர்த்தகங்களைக் கண்காணித்துவந்த சிபிஐ, பிப்ரவரி 7, 2022 அன்று அந்நிறுவனத்தின் மீது எஃப்ஐஆர் பதிவு செய்து, அந்நிறுவனத்திற்குச் சொந்தமான 13 இடங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளது.
28 வங்கிகளில் கடன்கள் பெற்று, அவற்றை வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்படுத்தி, வெவ்வேறு கணக்குகளுக்கு மாற்றி இந்நிறுவனம் மோசடியில் ஈடுபட்டுள்ளது தற்போது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக ஏபிஜி நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர்கள் ரிஷி அகர்வால், சந்தானம் முத்துசாமி, அஷ்வினி குமார், சுஷில் குமார் அகர்வால் மற்றும் ரவி விமல் நெவெடியா ஆகியோர் மீது கிரிமினல் சதி, ஏமாற்றுதல், கிரிமினல் நம்பிக்கை மீறல் மற்றும் உத்தியோகபூர்வ பதவியைத் துஷ்பிரயோகம் செய்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் எஃப்,ஐ.ஆர் பதிவு செய்துள்ளது சிபிஐ.
இதில் ஏபிஜி ஷிப்யார்டு நிறுவனம் அதிகபட்சமாக ஐசிஐசிஐ வங்கிக்கு ₹7,089 கோடியும், ஐடிபிஐ வங்கிக்கு ₹3,639 கோடியும், ஸ்டேட் பேங்க் ₹2,925 கோடியும், பேங்க் ஆஃப் பரோடாவுக்கு ₹1,614 கோடியும், பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு ₹1,244 கோடியும் கடன் தொகையைத் திருப்பி செலுத்தவேண்டியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)