Advertisment

அம்பானி முதல் தலாய் லாமா ஆலோசகர்கள்வரை - அதிரவைக்கும் பெகாசஸ் பட்டியல்!

dalai lama

இந்தியா உட்பட உலகம் முழுவதும் பல்வேறு பத்திரிகையாளர்கள், அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோரது தொலைபேசிகள் பெகாசஸ் உளவு மென்பொருளால் ஹேக் செய்யப்பட்டு, ஒட்டுக் கேட்கப்பட்டதாக சர்ச்சை வெடித்துள்ளது. இந்தியாவில் 40 பத்திரிகையாளர்கள், 3 எதிர்க்கட்சித் தலைவர்கள், உச்ச நீதிமன்ற நீதிபதி, பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள இருவர், சமூக ஆர்வலர்கள், தொழிலதிபர்கள் என 300க்கும் மேற்பட்டோரின் தொலைபேசி எண்கள் பெகாசஸ் மூலம் ஹேக் செய்யப்பட்டன அல்லது ஹேக் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என இந்தப் பெகாசஸ் ஹேக்கிங் குறித்து 'பெகாசஸ் ப்ராஜெக்ட்' என்ற பெயரில் ஆய்வுசெய்த ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இது பெரும் சர்ச்சையானது.

Advertisment

இந்தநிலையில், 'பெகாசஸ் ப்ராஜெக்ட்' ஆய்வில் ஈடுபட்ட ஊடகங்களில் ஒன்றான தி வயர், பெகாசஸ் விவகாரம் குறித்து தினமும் அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் தி வயர், தலாய் லாமாவின் ஆலோசகர்கள் மற்றும் ஆதரவாளர்களின் எண்களும் பெகாசஸ் பட்டியலில் இருந்ததாக கூறியுள்ளது.

Advertisment

2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு, ரஃபேல் விவகாரம் தீவிரமாக எழுப்பப்பட்டு வந்தநிலையில், அனில் அம்பானியின் தொலைபேசி எண்ணும், ரிலையன்ஸ் நிறுவனத்தின் அதிகாரி ஒருவரின் எண்ணும்,ரஃபேல் விமானத்தை தயாரிக்கும் டாசல்ட் நிறுவனத்தின் இந்திய பிரதிநிதியின் எண்ணும் பெகாசஸ் பட்டியலில் சேர்க்கப்பட்டதாகவும் தி வயர் கூறியுள்ளது.

சிபிஐயின் இயக்குநராக இருந்த அலோக் வர்மாவும், சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானாவும் கடந்த 2018ஆம் ஆண்டு ஒருவர் மீது ஒருவர் அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இதன்தொடர்ச்சியாக மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணைய பரிந்துரையின் பேரில், மத்திய அரசு இருவரையும் கட்டாய விடுப்பில் அனுப்பியது. அதன்பிறகு 2019ஆம் ஆண்டு அலோக் வர்மாவை கட்டாய விடுப்பில் அனுப்பியது செல்லாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதன்பிறகு பிரதமர் தலைமையில அப்போதைய மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் பிரதிநிதி, நீதிபதி ஏ.கே. சிக்ரி ஆகியோர் அடங்கிய தேர்வுக்குழு கூட்டம் கூடி, அலோக் வர்மாவை சிபிஐ இயக்குநர் பதவியில் இருந்து நீக்கியது. குழுவில் இடம்பெற்ற இதற்கு மல்லிகார்ஜுன கார்கே மட்டும் அலோக் வர்மாவை நீக்க எதிர்ப்பு தெரிவித்தார்.

இந்தநிலையில், 2018ஆம் ஆண்டு, சிபிஐ இயக்குநர் அலோக் வர்மாவிற்கு கட்டாய விடுப்பு வழங்கப்பட்ட சில மணிநேரத்திலேயே, அவரது எண் பெகாசஸ் பட்டியலில் சேர்க்கப்பட்டதாக தி வயர் கூறியுள்ளது. அலோக் வர்மாவுடன் சேர்த்து அவரது மனைவி, மகள் மற்றும் மருமகனின் தனிப்பட்ட தொலைபேசி எண்கள் எண்கள் என, அலோக் வர்மாவின் குடும்பத்தாருடைய எட்டு தொலைபேசி எண்கள் பெகாசஸ் பட்டியலில் சேர்க்கப்பட்டதாகவும், மூத்த சிபிஐ அதிகாரிகள் ராகேஷ் அஸ்தானா, ஏ.கே. ஷர்மா ஆகியோரதுஎண்களும் பெகாசஸ் பட்டியலில் இணைக்கப்பட்டதாகவும் தி வயர் தெரிவித்துள்ளது. அலோக் வர்மாவிற்கு கட்டாய ஓய்வளிக்கப்பட்டபோது, ரஃபேல் ஊழல் குறித்த ஆவணங்களை சேகரித்ததாலேயே, அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

பெகாசஸ் பட்டியலில் எண் இருப்பதால் மட்டுமே, அந்த எண்கள் உளவு பார்க்கப்பட்டதாக அர்த்தமில்லை எனவும், தடயவியல் சோதனை செய்தால் மட்டுமே உளவு பார்க்கப்பட்டதா என்பதை உறுதிப்படுத்த முடியும் எனதி வயர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

CBI anil ambani Pegasus Spyware pegasus report
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe