Cauvery Management Commission meeting in Delhi

காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 99வது கூட்டம் காணொளி காட்சி வாயிலாக கடந்த 11 ஆம் தேதி (11.07.2024) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், “தமிழகத்திற்கு ஜூலை 12 ஆம் தேதி (12.07.2024) முதல் வரும் 31ஆம் தேதி (31.07.2024) வரை நாள்தோறும் 1 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட வேண்டும்” எனக் கர்நாடகாவுக்கு பரிந்துரை செய்திருந்தது. மேலும் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு செல்லும் நீரின் அளவு 1 டிஎம்சியாக இருப்பதைக் கர்நாடக அரசு அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

Advertisment

அதே சமயம் கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை ஜூலை முதல் வாரத்தில் தொடங்கி தற்போது வரை விட்டு விட்டு கனமழை பொழிந்து வருகிறது. இதனால் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான மைசூர், குடகு, ஹாசன் உள்ளிட்ட பகுதிகளிலும் கடலோர மற்றும் மலை மாவட்டங்களிலும் தொடர்ந்து மழை பொழிவதால் கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதன்படி கர்நாடகாவின் முக்கிய அணைகளான கிருஷ்ணராஜ சாகர் அணை மற்றும் கபினி, ஹேமாவதி உள்ளிட்ட அணைகளில் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. இதனால் தொடர்ந்து உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது.

Advertisment

இந்நிலையில் டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 32வது கூட்டம் இன்று (24.07.2024) பிற்பகல் 02.30 மணிக்கு நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்திற்கு காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமை தாங்குகிறார். இந்தக் கூட்டத்தில் பங்கேற்க தமிழகம், கர்நாடகம், கேரளா மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.