கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த வழக்கு; சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றம்!

Case where 11 people lost their life in a stampede transferred to CID investigation

ஆர்.சி.பி. அணியின் வெற்றி பேரணியைக் காண்பதற்காக ஆயிரக்கணக்கான ரசிகர்கள் நேற்று (04.06.2025) காலை முதலே பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் திரண்டனர். இந்த மைதானத்தின் நுழைவாயில் அருகே ஏராளமானோர் திரண்டதால் அங்கு பயங்கர கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி, ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுமி என 11 பேர் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 45க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தற்போது அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த துயரச் சம்பவத்திற்குப் பிரதமர் மோடி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்தனர். அதே சமயம் கர்நாடகா துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் இந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகத் தெரிவித்தார். 35 ஆயிரம் பேர் அமரக்கூடிய மைதானத்தில், 2 முதல் 3 லட்சம் பேர் வந்திருந்ததால் இந்த துயரச் சம்பவம் அரங்கேறியுள்ளது என்றும், காவல்துறையை அறிவுறுத்தலையும் மீறி இந்த பேரணி நடத்தத் திட்டமிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து கர்நாடகா உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

இத்தகைய சூழலில் தான், இந்த சம்பவம் தொடர்பாக ஆர்.சி.பி. அணி நிர்வாகம், கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் (கே.எஸ்.சி.ஏ), டி.என்.ஏ நெட்வொர்க்ஸ் மற்றும் சிலர் மீது கப்பன் பார்க் காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. உயிரிழப்பு ஏற்படும் வகையில் கவனக்குறைவாகச் செயல்பட்டது, மற்றவர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் செயல்கள், கொலைக்குச் சமமானதல்லாத குற்றவியல் கொலை என பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கை சி.ஐ.டி. (C.I.D) விசாரணைக்கு மாற்றி கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. முன்னதாக கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 11 பேருக்குக் கர்நாடகா கிரிக்கெட் சங்கம் சார்பில் தலா ரூ. 5 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கர்நாடகா அரசு தரப்பில் தலா ரூ.10 லட்சம், ஆர்.சி.பி. நிர்வாகம் சார்பில் தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Bangalore bangalore royal challengers Investigation ipl 2025 karnataka rcb
இதையும் படியுங்கள்
Subscribe