Skip to main content

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப் பதிவு!

Published on 12/03/2024 | Edited on 12/03/2024
Case registered against Minister Udayanidhi Stalin

சென்னையில், கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற ‘சனாதன ஒழிப்பு’ மாநாட்டில் அமைச்சர்கள் சேகர்பாபு, உதயநிதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “சனாதனம் என்ற பெயரே சமஸ்கிருதத்தில் இருந்து வந்ததுதான். இந்த மாநாட்டை பார்க்கின்ற போது சிலருக்கு எரிச்சல் இருக்கும். அவர்களுக்கு முடிந்த வரை எரியட்டும். எல்லா சமூக மக்களையும் ஒரே இடத்தில் குடி வைத்து அந்த இடத்திற்கு சமத்துவபுரம் என்று பெயர் வைத்து சனாதனத்திற்கு சம்மட்டி அடி கொடுத்தவர்தான் கலைஞர்.

டெங்கு, மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது, ஒழித்துக் கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனமும். சொந்த மாநில மக்களை இரண்டு குழுக்களாகப் பிரித்து கலவரத்தை மூட்டி உள்ளார்கள். இதுதான் சனாதனம். சனாதனத்தை எதிர்ப்பதை விட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியம்” என்றார். இவரது பேச்சு நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மேலும், இந்த மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் சேகர்பாபு மீதும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி இந்து முன்னணி நிர்வாகிகள் சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர்.

இந்த வழக்கு கடந்த 6 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கில் எந்த விதமான உத்தரவும் பிறப்பிக்க முடியாது. இதற்காக அவர்களை பதவி நீக்கம் செய்ய முடியாது என்று கூறி நீதிபதி அனிதா சுமந்த் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், “நமது சமூகத்தில் உள்ள சாதிய அமைப்பு, கடந்த நூற்றாண்டில்தான் உருவாக்கப்பட்டது. அப்படியிருக்க, சாதிய கொடுமைகளுக்கு வர்ணாசிரமம் தான் காரணம் என பழி கூற முடியுமா? வர்ணாசிரமம் பிறப்பின் அடிப்படையில் உருவாக்கப்படவில்லை; செய்யும் தொழிலின் அடிப்படையில் தான் உருவாக்கப்பட்டது. சனாதனம் என்பது அழிவற்ற நிலையான, ஒழுக்க நெறிகளை குறிக்கிறது. ஆனால் சனாதனம் பற்றி நீங்கள் பேசிய கருத்து முற்றிலும் தவறு” என்று கருத்து தெரிவித்திருந்தார். இந்நிலையில் சனாதன தர்மம் குறித்துப் பேசியது தொடர்பாக மத உணர்வுகளை உதயநிதி ஸ்டாலின் புண்படுத்திவிட்டதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது பீகாரின் ஹர்ரா நகரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்

 

Next Story

65% இட ஒதுக்கீடு சட்டம் ரத்து; பாட்னா நீதிமன்றம் அதிரடி

Published on 20/06/2024 | Edited on 20/06/2024
 Patna court in action on Repeal of bihar 65% Reservation Act

பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநிலத்தின் முதல்வராக ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் நிதிஷ்குமார் உள்ளார்.  பீகார் மாநிலத்தில் நடத்தப்பட்ட சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு விபரங்கள் அம்மாநில அரசால் கடந்த ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி வெளியிடப்பட்டது.

இதையடுத்து பீகார் மாநிலத்தில் நடத்தப்பட்ட சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பின் முழு விவரங்களையும் அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு நவம்பர் 7ஆம் தேதி வெளியிட்டிருந்தார். மேலும் பீகார் மாநிலத்தில் மொத்த இட ஒதுக்கீட்டு அளவை 65 சதவீதமாக உயர்த்த முதல்வர் நிதிஷ்குமார் பரிந்துரை செய்திருந்தார். அதனைத் தொடர்ந்து முதல்வர் நிதிஷ்குமாரின் பரிந்துரைக்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது. 

இதையடுத்து பீகார் மாநிலத்தில் மொத்த இட ஒதுக்கீட்டு அளவை 50 சதவீதத்தில் இருந்து 65 சதவீதமாக உயர்த்தும் மசோதா அம்மாநில சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் உயர்சாதி ஏழைகளுக்கான 10 விழுக்காட்டை சேர்த்தால் பீகார் மாநிலத்தின் மொத்த இட ஒதுக்கீடு 75 சதவீதமாக அதிகரித்தது. 

பீகார் மாநிலத்தில் இட ஒதுக்கீட்டை 75% ஆக உயர்த்தும் புதிய சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்ததையடுத்து அரசிதழ் வெளியிடப்பட்டது. புதிய சட்டத்தின் படி, பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்களுக்கு(ST) 2 சதவிதமும், பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு(SC) 20 சதவிதமும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு (EBC) 25 சதவிதமும், பிற்படுத்தப்பட்ட வகுப்பை(BC) 18 சதவிதமும், உயர்சாதி ஏழைகளுக்கு (EWS) 10 சதவிதம் என இடஒதுக்கீடு வரையறுக்கப்பட்டது. 

இந்த நிலையில், பீகாரில் இடஒதுக்கீட்டை 50% இருந்து 65%ஆக உயர்த்தி இயற்றப்பட்ட சட்டத்தை பாட்னா நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியல், பழங்குடியினருக்கான 65 சதவீத இட ஒதுக்கீடு சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

Next Story

திறப்பு விழாவுக்கு முன்பே இடிந்த பாலம்; பொதுமக்கள் அதிர்ச்சி!

Published on 19/06/2024 | Edited on 19/06/2024
The bridge collapsed before the opening ceremony in bihar

பீகார் மாநிலத்தில் திறப்பு விழாவுக்கு முன்பே கட்டப்பட்ட பாலம் இடிந்து விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பீகார் மாநிலத்தில், முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இம்மாநிலம், அராரியா மாவட்டத்தில் பத்ரா நதிக்கு குறுக்கே பத்கியா காட் எனும் பகுதியில் ரூ.12 கோடி செலவில் புதிதாக மேம்பாலம் ஒன்று கட்டப்பட்டிருந்தது. கடந்த ஓராண்டுக்கும் மேலாக இந்த மேம்பாலp பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது.

தற்போது இந்த பணிகள் முடிவடைந்த நிலையில், இன்னும் சில தினங்களில் இந்த மேம்பால திறப்பு விழா நடைபெறுவதாக இருந்தது. இந்த நிலையில், இந்த மேம்பாலம் நேற்று (18-06-24) திடீரென்று இடிந்து விழுந்தது. இதனை அங்கிருந்த சிலர், தங்கள் செல்போனில் வீடியோவாக எடுத்தனர். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இது குறித்த விசாரணையில், தரமற்ற கட்டுமானத்தால் இந்த மேம்பாலம் இடிந்து விழுந்துள்ளதாகக் கூறப்படுகிறது. திறப்பு விழாவுக்கு முன்பே பாலம் இடிந்து விழுந்ததால் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.