Skip to main content

தனது சொந்த திருமணத்திற்கே வராத எம்.எல்.ஏ... போலீஸில் புகாரளித்த மணப்பெண்!

Published on 19/06/2022 | Edited on 19/06/2022

 

case filed against odisha mla for missing his own wedding

 

தனது சொந்த திருமணத்தின் பதிவிற்கு பதிவாளர் அலுவலகம் வராததால், ஒடிசா எம்.எல்.ஏ மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில போலீஸார் தெரிவித்துள்ளனர்.

 

பிஜு ஜனதாதளத்தைச் சேர்ந்த பிஜாய் சங்கர் என்பவர் திர்டோல் சட்டமன்றத் தொகுதியின் எம்.எல்.ஏ -வாக உள்ளார். 30 வயதான பிஜாய் சங்கர் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் பதிவுத் திருமணம் செய்ய முடிவெடுத்து, கடந்த மே 17 அன்று பதிவாளர் அலுவலகத்தில் விண்ணப்பம் செய்துள்ளனர். இதனையடுத்து, கடந்த வெள்ளிக்கிழமை இவர்கள் இருவரின் திருமணப் பதிவும் ஜகத்சிங்பூர் சதார் பகுதியில் உள்ள பதிவாளர் அலுவலகத்தில் நடைபெறுவதாக இருந்துள்ளது. இதற்காக மணப்பெண் காலையிலிருந்து அலுவலகம் வந்து காத்திருந்த நிலையில், மணமகனாக பிஜாய் சங்கர் அங்கு வரவில்லை. நீண்ட நேரம் காத்திருந்து அவர் அலுவலகம் வராததால் பொறுமை இழந்த மணப்பெண், பிஜாய் சங்கர் தன்னை திருமணம் செய்துகொள்ளாமல் ஏமாற்றிவிட்டதாக ஜகத்சிங்பூர் சதார் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

 

இந்த புகாரின் அடிப்படையில் ஜகத்சிங்பூர் சதார் காவல் நிலையத்தில் திர்டோல் சட்டமன்ற உறுப்பினர் பிஜாய் சங்கர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏமாற்றுதல், பெண்ணின் நாகரீகத்தை அவமதிக்கும் நோக்கில் செயல்படுதல் உள்ளிட்ட ஏழு பிரிவுகளில் இவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

 

இவ்விவகாரம் அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து விளக்கமளித்துள்ள பிஜாய் சங்கர், "நான் திருமணம் செய்யாமல் ஏமாற்றவில்லை. திருமணப் பதிவுக்கு இன்னும் 60 நாட்கள் அவகாசம் உள்ளது. எனவேதான் வெள்ளிக்கிழமை நான் வரவில்லை. திருமணப் பதிவாளர் அலுவலகத்திற்குச் செல்லுமாறு மணப்பெண்ணோ அவரது குடும்பமோ என்னிடம் சொல்லவில்லை" என்று தெரிவித்துள்ளார். 

 

இந்த விவகாரம் குறித்து பேசிய புகாரளித்த பெண், "நானும் பிஜாய் சங்கரும் மூன்று ஆண்டுகளாகக் காதலித்து வருகிறோம். திட்டமிட்ட தேதியில் என்னைத் திருமணம் செய்து கொள்வதாக அவர் உறுதியளித்திருந்தார். ஆனால், இப்போது அவரது சகோதரரும் மற்ற குடும்ப உறுப்பினர்களும் என்னை மிரட்டுகிறார்கள். அவர் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை, எனது தொலைபேசி அழைப்புகளுக்கும் அவர் பதிலளிக்கவில்லை," என்று குற்றம் சாட்டியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்