பாஜக தேசிய பொதுச் செயலாளர் முரளிதர் ராவ் மீது ஹைதராபாத் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஹைதராபாத்தை சேர்ந்த பெண் ஒருவரிடம் மத்திய அரசு பணி வாங்கி தருவதாக கூறி 2.17 கோடி ரூபாய் பணம் பெற்று ஏமாற்றியதாக கொடுக்கப்பட்ட புகாரில் இந்த வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்த வழக்கில் மொத்தம் எட்டு பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. கிருஷ்ணா கிஷோர், ஈஸ்வர் ரெட்டி, மண்டா ராமச்சந்திர ரெட்டி, கஜுலா ஹனுமந்தா ராவ், சாமாந்திரச்சாச்சர் ரெட்டி, பாபா, ஸ்ரீகாந்த் மற்றும் ஜி ஸ்ரீனிவாசன் ஆகியோர் அந்த 8 பேர் ஆவார்கள்.

ஈஸ்வர் ரெட்டி என்பவர் 41 வயதான பிரவர்ணா ரெட்டி என்பவரை சந்தித்து அவருக்கு முரளிதர ராவின் நண்பரான கிருஷ்ணா கிஷோரை தெரியும் என்றும், அவர் மூலமாக பிரவர்ணா வின் கணவருக்கு எளிதாக மத்திய அரசு பணி வாங்க முடியும் என்றும் கூறியுள்ளார். இதற்கு முதலில் சம்மதிக்காத பிரவர்ணா பிறகு ஒப்புக்கொண்டுள்ளார். அதனை தொடர்ந்து சில நாட்கள் கழித்து பார்மா குழுவின் தலைவராக பிரவர்ணாவின் கணவர் நியமிக்கப்பட்டதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கையெழுத்து உள்ள ஆணை பிரவர்ணாவிடம் கொடுக்கப்பட்டுள்ளது.
அதற்காக 2.17 கோடி ரூபாய் அவர்கள் வாங்கிக்கொண்டு சென்றுவிட்டனர். அதன்பின்னர் பணியில் சேர்வது குறித்து கேட்பதற்காக அவர்களை தொடர்புகொண்ட போது, அவர்கள் பிரவர்ணாவின் அழைப்பை ஏற்கவில்லை. இதனையடுத்து அவர்கள் மீது புகார் கொடுக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக முரளிதர ராவ் விளக்கம் ஒன்றை தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் தனக்கும் வழக்கு பதிவு செய்யப்பட்ட அந்த நபர்களுக்கும் எந்த தொடர்புள்ள இல்லை என அவர் கூறியுள்ளார்.