/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/kerala-shilp-container-art.jpg)
கேரளா மாநிலம் கொச்சியிலிருந்து 38 நாட்டிக்கல் கிலோ மீட்டர் தொலைவில் கடல் அலையில் நேற்று முன்தினம் (24.05.2025) கடும் சீற்றம் காணப்பட்டது. கடல் அலையின் சீற்றம் காரணமாக லைபிரியா நாட்டுக்குச் சொந்தமான எம்.எஸ்.சி. எல்சா 3 என்ற கப்பலில் அதிகமாக நீர் ஏறியது. இதனால் வலதுபுறமாக நேற்று சுமார் 26 டிகிரி சாய்ந்தது. இதன் காரணமாகக் கப்பலில் இருந்த கண்டெய்னர்களில் சில கடலில் கலந்தன. அதே சமயம் கப்பலில் இருந்த பெரும்பாலான மாலுமிகள் நேற்று முன்தினம் மீட்கப்பட்டனர். அதில் இருந்த 3 மாலுமிகள் மட்டும் கப்பலில் இருந்தனர்.
அதாவது மீட்புப்பணிகள் மேற்கொள்ளும் போது அவர்களின் உதவி தேவைப்படும் என்று கேப்டன் உட்பட 3 பேர் கப்பலில் இருந்தனர். இத்தகைய சூழலில் தான் நேற்று (25.05.2025) காலை கப்பலானது மேலும் வலதுபுறம் சரிந்து கடலில் மூழ்கத் தொடங்கியது. இதனால் கப்பலில் எஞ்சியிருந்த கப்பலின் கேப்டன் உட்பட 3 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். இதன் மூலம் கப்பலில் இருந்த 24 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். மேலும் இந்த சம்பவத்தை இந்தியக் கடலோர காவல் படை தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
இந்த கப்பலில் சுமார் 640 கண்டெய்னர்கள் உள்ளன. அதில் சுமார் 13 கண்டெய்னர்களில் நச்சு ரசாயனங்கள் இருப்பதாகக் கப்பல் நிறுவனமானது தெரிவித்துள்ளது. அதிலும் குறிப்பாக 12 கண்டெயனர்களில் கால்சியர் கார்பைடு என்ற வேதிப்பொருள் இருப்பதாக கூறப்படுகிறது. அதோடு கப்பலின் பயன்பாட்டிற்காக சுமார் 84 மெட்ரிக் டன் டீசலும், சுமார் 367 மெட்ரிக் டன் உலை எண்ணெய்யும் உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கப்பல் ஆழமாக மூழ்கும் பட்சத்தில் முதலில் கப்பலின் பயன்பாட்டுக்கு வைத்துள்ள டீசல் மற்றும் கச்சா எண்ணெய் தான் முதலில் கடலில் கலக்கும் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியிருந்தது.
அதே சமயம் கடலோர பகுதிக்கு அடித்து வரப்படும் எந்த ஒரு பொருளையும் எடுக்க வேண்டாம் என மீனவர்களுக்கும், சுற்றுலாப் பயணிகளுக்கும், பொதுமக்களுக்கும் கேரள மாநில பேரிடர் மேலான்மைத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கடலில் கவிழ்ந்த சரக்கு கப்பலில் இருந்து சில கண்டெய்னர்கள் கொல்லம் கடல் பகுதியில் கரை ஒதுங்கியுள்ளன. இது குறிந்து அம்மாநில அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே கப்பலில் இருந்து ரசாயனம் மற்றும் எண்ணெய்க் கசிவு ஏதும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிபிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)