Skip to main content

ஹிஜாப் விவகாரம்: என்னால் அதிகாரிகளுக்கு ஆடை கட்டுப்பாட்டை விதிக்க முடியாது - யோகி ஆதித்யநாத் கூறும் காரணம்!

Published on 17/02/2022 | Edited on 17/02/2022

 

yogi aditynath

 

கர்நாடகா மாநிலத்தில், இஸ்லாமியப் பெண்கள் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வருவதைக் கண்டித்து, ஒரு தரப்பு மாணவர்கள் காவி துண்டுகளை அணிந்து கல்லூரிக்கு வரத்தொடங்கினர். இதன் காரணமாக மாணவிகளுக்கு ஹிஜாப் அணிந்து வர சில கல்லூரிகள் தடை விதித்தன. இதனைத் தொடர்ந்து ஹிஜாப் அணிவதற்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் போராட்டம் வெடித்தது.

 

இதனால் மாநிலம் முழுவதும் பதற்றம் ஏற்பட்ட நிலையில், ஹிஜாப் விவகாரம் தொடர்பான வழக்கை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம், மாணவர்கள் மத அடையாளத்தை வெளிப்படுத்தும் உடைகளை பள்ளி, கல்லூரிகளில் பயன்படுத்தத் தடை விதித்து இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

 

இந்தநிலையில் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், தான் ஒரு குறிப்பிட்ட வகை ஆடையை (காவி ஆடையை) அணிய விரும்புவதால், தன்னால் அதிகாரிகளுக்கு ஆடை கட்டுப்பாடு விதிக்க இயலாது எனத் தெரிவித்துள்ளார்

 

ஹிஜாப் விவகாரத்தைக் குறிப்பிடும் விதமாகப் பேசிய அவர் கூறியுள்ளதாவது: ஒவ்வொரு நபரும் அவர்கள் விரும்பியதை அணியச் சுதந்திரம் உள்ளது. ஆனால் பொது இடங்கள், சந்தைகள் மற்றும் வீடுகளோடு அந்த சுதந்திரம் முடிவுக்கு வந்துவிடும். நான்  ஒரு குறிப்பிட்ட வகையான உடையை அணிய விரும்புகிறேன் என்பதால், எனது அதிகாரிகள் மீது என்னால் ஆடைக்கட்டுப்பாட்டை விதிக்க முடியாது.

 

எனினும், ஒவ்வொரு அமைப்பும் ஒரே மாதிரியான ஆடை கட்டுப்பாட்டைப் பின்பற்ற வேண்டும். ஒரு போலீஸ்காரர் ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர், அந்த மதத்திற்கு ஏற்றவாறு உடை அணிவார் என்றால், அந்த அமைப்பு குழப்பத்திற்கு உள்ளாகும். இவ்வாறு யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

50 லட்சம் பேர் எழுதிய காவலர் தேர்வு ரத்து; உ.பி. அரசு அதிரடி அறிவிப்பு

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
UP Govt Action Announcement for Constable exam written by 50 lakhs cancelled

உத்தரப் பிரதேச மாநில காவல்துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காகப் பல்வேறு மாவட்டங்களில் எழுத்துத் தேர்வு கடந்த 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் நடைபெற்றது. இந்த தேர்வு மாநிலம் முழுவதும் 775 மாவட்டங்களில் 2,385 தேர்வு மையங்களில் நடைபெற்றது. 60,000 காலிப் பணியிடங்களுக்காக நடத்தப்பட்ட இந்த தேர்வில், 50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து தேர்வெழுதினர். 

இந்த நிலையில், காவல்துறை பணியிடங்களுக்காக நடைபெற்ற எழுத்துத் தேர்வை ரத்து செய்வதாக உத்தரப் பிரதேச மாநில அரசு அறிவித்துள்ளது. தேர்வுக்கு முன்னரே, வினாத்தாள் கசிந்து பரவியதாக வெளியான புகாரின் அடிப்படையில் இந்த தேர்வு ரத்து நடவடிக்கை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

இது குறித்து, உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்துள்ளதாவது, ‘ரிசர்வ் சிவில் காவலர் பணியிடங்களுக்கான தேர்விற்காக நடத்தப்பட்ட தேர்வு 2023-ஐ ரத்து செய்து, அடுத்த 6 மாதங்களுக்குள் மறுதேர்வு நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தேர்வுகளின் புனிதத் தன்மையில் சமரசம் செய்துகொள்ள முடியாது. இளைஞர்களின் கடின உழைப்பில் விளையாடுபவர்களை எந்த சூழ்நிலையிலும் தப்ப முடியாது. இதுபோன்ற கட்டுக்கடங்காத செயல்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று பதிவிட்டுள்ளார்.

Next Story

“பெண்கள் ஹிஜாப் அணிந்தால் எப்படி சுவாசிக்க முடியும்?” - பா.ஜ.க எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு

Published on 30/01/2024 | Edited on 30/01/2024
jaipur BJP MLA says How can women breathe if they wear hijab?

கர்நாடகா மாநிலத்தில் கடந்த ஆண்டு பா.ஜ.க ஆட்சியின் போது, உடுப்பி மாவட்டத்தின் ஒரு கல்லூரியில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வரத் தடை விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அதே கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் காவி துண்டை அணிந்துகொண்டு வந்தனர். இதனால், தொடர்ந்து கர்நாடகா மாநிலத்தில் பெரும் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. பிறகு இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்று, தற்போது வழக்கு நிலுவையில் உள்ளது. 

இதனையடுத்து ஹிஜாப் தடையை திரும்ப பெற கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா உத்தரவு பிறப்பித்தார். உடை, சாதி அடிப்படையில் மக்களை பிரிக்கும் வேலையை பாஜக செய்து வருகிறது என குறிப்பிட்டுள்ள கர்நாடக முதல்வர் சித்தராமையா, கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்த பாஜக அரசின் அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டார். இந்த நிலையில், ஜெய்ப்பூரில் பா.ஜ.க எம்.எல்.ஏ ஒருவர், ஹிஜாப் அணிந்து வந்த இஸ்லாமிய மாணவிகளிடம் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். அது தற்போது பெரும் விவாதப்பொருளாக மாறியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூர் பகுதியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில், சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்து ஏராளமான மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில், இந்த பள்ளியில் சமீபத்தில் ஆண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவினை சிறப்பிப்பதற்காக சிறப்பு விருந்தினராக பா.ஜ.க எம்.எல்.ஏ பாலமுகுந்த் ஆச்சார்யா அழைக்கப்பட்டிருந்தார். அதன்படி, பாலமுகுந்த் ஆச்சார்யா சிறப்பு விருந்தினராக பங்கேற்பதற்காக அப்பள்ளிக்கு சென்றார். 

அப்போது அவர், அங்கு ஹிஜாப் உடை அணிந்து வந்த இஸ்லாமிய மாணவிகளிடம், “ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு வரக்கூடாது. ஹிஜாப் அணிந்திருந்தால் எப்படி சுவாசிக்க முடியும்” என்று ஆட்சேபனைக்குரிய வகையில் கேள்வி எழுப்பியதோடு ஹிஜாப்பை கழற்றுமாறு கூறியுள்ளார். இதை, இஸ்லாமிய மாணவிகள் தங்களது பெற்றோரிடம் கூறியுள்ளனர். இதையடுத்து, ஆட்சேபனைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த பா.ஜ.க எம்.எல்.ஏ பாலமுகுந்த் ஆச்சார்யா மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இஸ்லாமிய மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் அங்குள்ள காவல் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.