நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது.
இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் ஜனதா தளம்(எஸ்) கட்சி போட்டியிடுகிறது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. இந்நிலையில் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வால் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களைப் பிரஜ்வால் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரஜ்வால் ரேவண்ணா பல பெண்களுடன் இருக்கும் ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து எதிர்க்கட்சிகள் பரபரப்பு குற்றச்சாட்டுகளை வைத்திருக்கும் நிலையில் தன்னுடைய எக்ஸ் வலைத்தள பக்கத்தில் 'வாய்மையே வெல்லும்' என பதிவிட்டுள்ள பிரஜ்வால் ரேவண்ணா 'தனது வழக்கறிஞர் மூலம் பெங்களூரு போலீசாரிடம் தகவல் தெரிவித்துவிட்டேன். தற்போது நான் பெங்களூரில் இல்லை என்பதால் விசாரணைக்கு ஆஜராக முடியாது' என பதிவிட்டுள்ளார்.