publive-image

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலையுடன் நிறைவு பெற இருக்கும் நிலையில் அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisment

கர்நாடகாவில் மே 10 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. ஆட்சியிலிருக்கும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. நாளை மறுநாள் தேர்தல் எனும் நிலையில், இன்று மாலையுடன் அங்கு தேர்தல் பிரச்சாரம் முடிவடைகிறது. இதனால், அரசியல் கட்சியினர் தீவிரமாக தங்கள் இறுதிக்கட்டத் தேர்தல் பிரச்சாரத்தை செய்து வருகின்றனர். ஒவ்வொரு கட்சியினரும் புதுவிதமாக பிரச்சாரங்களில் ஈடுபட்டு வரும் நிலையில் உள்துறை அமைச்சர்அமித்ஷா ஊர்வலமாகச் சென்றும் பிரதமர் மோடி 10 கிலோ மீட்டர் தூரம் வரை திறந்த வாகனத்திலும் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி நேற்று டெலிவரி பாய் ஒருவரின் இருசக்கர வாகனத்தில் சென்று பிரச்சாரங்களை செய்தார்.

Advertisment

இன்று பெங்களூருவில் பேருந்தில் ஏறி பிரச்சாரம் செய்த ராகுல் காந்தி பேருந்தில் இருந்த பெண்களிடம், பெண்களுக்கான இலவச பேருந்து பயணம் என்ற காங்கிரஸ் கட்சியின் திட்டம் குறித்து கூறினார். பேருந்தில் இருந்த இளம் பெண்களிடம் இத்திட்டம் நல்ல திட்டம்தானா என்றும் கேட்டறிந்தார். ராகுலின் கேள்விக்கு பதில் அளித்த பெண், “நாங்கள் பேருந்தில் தான் பயணம் செய்கிறோம். ஏனென்றால் மெட்ரோ போக்குவரத்து வசதி இங்கில்லை. அலுவலகங்களில் கடுமையான நேரக் கட்டுப்பாடு உள்ளது. எனவே குறித்த நேரத்திற்குள் அலுவலகத்திற்கு செல்வது என்பது மிக முக்கியமான ஒன்று” என்றார்.

இதனைத் தொடர்ந்து பேசிய ராகுல், பெண்ணாக தினம் தினம் நீங்கள் சந்திக்கும் கடினமான விஷயம் என்ன என்று கேட்டார். அதற்கு பதில் அளித்த மற்றொரு, “பேருந்துகளில் உள்ள பெண் பயண நெருக்கடி” எனக் கூறினார். முன்னதாக பேருந்து நிறுத்தத்தில் கல்லூரியில் பயிலும் பெண்களிடம் உரையாற்றிய அவர் உங்கள் கல்லூரி எங்கு இருக்கிறது? அனைவரும் கல்லூரி மாணவிகள்தானா என்றெல்லாம் விசாரித்தார். பின் பேருந்தில் ஏறியவர் பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த பெண்களிடம் அவர்களது வேலை குறித்தும் கேட்டறிந்தார். அவர்களிடம் உரையாடிய ராகுல், “என்ன செய்ய வேண்டும் என்பதே தெரியாமல் இருக்கும் பல குழந்தைகளை நான் காண்கிறேன். அவர்களது பெற்றோர் என்ன சொல்கிறார்களோ அதை மட்டுமே அவர்கள் செய்கிறார்கள்” எனக் கூறினார்.

பின் தனது பக்கத்தில் இருந்த இருக்கையில் அமர்ந்திருந்த பெண்மணியிடம் அவரது கணவர் குறித்து கேட்கையில், “அவர் நீரிழிவு நோயாளி, தான் நடுங்கிக் கொண்டிருப்பதாக அவர் கூறுகிறார். அவர் உண்மையாகவே அருமையான மனிதர். நல்ல தகுதியுடைய அடக்கமான மனிதர் அவர்” எனக் கண்ணீர் வடித்துக் கொண்டே அப்பெண் கூற, அவரது புகைப்படத்தை நான் பார்க்கலாமா என ராகுல் காந்தி கேட்டார். பின் அப்பெண்மணி தனது கணவரது புகைப்படத்தை காட்டினார். புத்திசாலியான மனிதர் அவர், ஃப்ரான்ஸ் நாட்டிற்கெல்லாம் சென்றுள்ளார். மக்கள் அனைவரிடமும் நல்ல பழக்க வழக்கங்களைக் கொண்டிருந்தவர். நான் உங்களுக்காகவும் உங்கள் குடும்பத்திற்காகவும் பிரார்த்திக்கிறேன். கடவுள் உங்களுக்கு அதிக ஆயுளையும் ஆசிர்வாதங்களையும் வழங்கட்டும்” என்றார்.