Cabinet meeting chaired by Prime Minister Modi

இந்தியா முழுவதும் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியானது. அதில் 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றது. இதனையடுத்து நாட்டின் பிரதமராக மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பதவியேற்கும் விழா டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று (09.06.2024) நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமராகப் பதவியேற்கும் மோடிக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து கேபினட் அமைச்சர்களாக ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிதின் கட்கரி, ஜெ.பி.நட்டா, சிவராஜ் சிங் சவுகான், நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர், மனோகர் லால் கட்டார், குமாரசாமி, பியூஸ் கோயல், தர்மேந்திர பிரதான், ஜிதன் ராம் மாஞ்சி, ராஜிவ் ரஞ்சன் சிங், சர்பானந்த சோனாவால், விரேந்திர குமார், ராம் மோகன் நாயுடு, பிரகலாத் ஜோஷி, ஜூவல் ஓரம், கிரிராஜ் சிங், அஸ்வினி வைஷ்னவ், ஜோதிர் ஆதித்ய சிந்தியா, பூபேந்தர் யாதவ், கஜேந்திரசிங் செகாவத், அன்னபூர்ணா தேவி, கிரண் ரிஜிஜூ, ஹர்திப்சிங் புரி, கிஷன் ரெட்டி, சிராக் பாஸ்வான், மன்சுக் மாண்டவியா மற்றும் சி.ஆர்.பர்டில் ஆகியோருக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இதனையடுத்து தனிப்பொறுப்புடன் கூடிய இணையமைச்சர்கள், மற்றும் இணையமைச்சர்கள்பதவியேற்றனர். இதன் மூலம் பிரதமர் மோடி தலைமையில் 72 பேர் கொண்ட அமைச்சர்கள் பதவி ஏற்றனர். அதில் 30 கேபினட் அமைச்சர்கள், தனிப்பொறுப்புடன் கூடிய 5 இணையமைச்சர்கள் மற்றும் 36 இணையமைச்சர்கள் பதவி ஏற்றனர்.

Cabinet meeting chaired by Prime Minister Modi

Advertisment

இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையில் புதியதாக பதவியேற்ற மத்திய அமைச்சரவையின் முதல் கூட்டம் டெல்லியில் உள்ள லோக் கல்யாண் மார்க்கில் அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்தில் தொடங்கியது. இதில் நாடாளுமன்றக் கூட்டத்தொடருக்கான தேதி, 100 நாட்கள் செயல் திட்டம், மக்களவை சபாநாயகர் தேர்வு செய்வது உள்ளிட்டவை குறித்து விவாதிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்தக் கூட்டத்திற்கு பிறகு மத்திய அமைச்சர்களின் இலாகா ஒதுக்கீடுகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கூட்டத்தில் மூத்த அமைச்சர்களான அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டுள்ளனர்.