Skip to main content

மத்திய அமைச்சராகிறார் எல். முருகன் - பதவியேற்பவர்களின் பட்டியல் வெளியீடு!

Published on 07/07/2021 | Edited on 07/07/2021

 

new ministers list

 

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று (07.07.2021) விரிவாக்கம் செய்யப்படுகிறது. இன்று மாலை ஆறு மணிக்கு இந்த புதிய அமைச்சர்கள் பதவியேற்கவுள்ளனர். இதனையொட்டி, ஏற்கனவே பதவிவகித்து வந்த பல்வேறு மத்திய அமைச்சர்கள் தங்களது பதவியில் இருந்து விலகியுள்ளனர்.

 

இந்நிலையில் இன்று மாலை பதவியேற்கவுள்ள புதிய அமைச்சர்களின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. அதில் அனைவரும் எதிர்பார்த்தபடியே ஜோதிராதித்ய சிந்தியாவின் பெயர் இடம்பெற்றுள்ளது. அதேபோல் தமிழக பாஜக தலைவர் எல். முருகன் பெயரும் இடம்பெற்றுள்ளது.

 

எல். முருகனுக்கு மத்திய இணை அமைச்சர் பதவி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில் மொத்தம் 43 பேர் பதவியேற்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  


 

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமராக்கள் செயலிழப்பு; நீலகிரியில் பரபரப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Malfunction of strong room CCTV cameras; Excitement in the Nilgiris

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.
 

தமிழகத்தில் தேர்தல் மக்களவை தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் வாக்கு பெட்டிகள் அனைத்தும் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீலகிரியில் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் திடீரென செயலிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நீலகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அருகிலுள்ள அறையிலிருந்து கண்காணிப்பதற்காக அனைத்து அரசியல் கட்சியினருக்கும் பொதுவாக ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இன்று மாலை திடீரென 173 சிசிடிவி கேமராக்கள் செயலிழந்தது. பின்னர் சுமார்  20 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் சிசிடிவி கேமராக்கள் வழக்கம் போல் செயல்பட தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்திருக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் சிசிடிவி காட்சிகள் திடீரென செயலிழந்தது அரசியல் கட்சியினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நீலகிரியில் திமுக சார்பில் ஆ.ராசாவும், அதிமுக கூட்டணி சார்பில் லோகேஷ் தமிழ்ச்செல்வனும், பாஜக கூட்டணியில் எல்.முருகனும், நாம் தமிழர் கட்சி சார்பாக ஜெயக்குமாரும் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Next Story

எல்.முருகன் மீது வழக்குப் பதிவு

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Case registered against L. Murugan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பரப்புரையில் இறங்கிய நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகளில் இறங்கியுள்ளனர். இந்நிலையில், தேர்தல் நடத்தை வழிமுறைகளை மீறியதாக நீலகிரி பாஜக வேட்பாளர் எல்.முருகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 25 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய வந்த மத்திய இணை அமைச்சரும் நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளருமான எல்.முருகன் பல்வேறு கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தியதுடன் உதகை அருகே உள்ள கிராமம் ஒன்றுக்குச் சென்று எந்த அனுமதியும் பெறாமல் 100க்கும் மேற்பட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து தேர்தல் பறக்கும் படையின் தலைவராக உள்ள துணை வட்டாட்சியர் தனலட்சுமி தேனாடுகம்பை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் தேர்தல் நடத்தைகளை மீறியதாக எல்.முருகன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.