இந்தியாவின் புதிய பில்லியனராக உருவெடுத்துள்ளார் 37 வயதான ரவீந்திரன். சாதாரண ஆசிரியராக இருந்த இவர், வெறும் 8 ஆண்டுகளில் மிகப்பெரிய கோடீஸ்வரராக உருவெடுத்துள்ளார். இதற்கான முக்கிய காரணம் அவரின் விடாமுயற்சியும், தொழில்நுட்ப ஆர்வமுமே காரணமாக அமைந்தது என கூறலாம்.

Advertisment

byjus founder raveendran becomes india's new billionaire

கேரள மாநிலத்தின் அழிக்கோடு கிராமத்தைச் சேர்ந்த ரவீந்திரன் பொறியியல் படித்துவிட்டு போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கான பயிற்சி மையத்தை நடத்தி வந்தார். தனது பயிற்சியை விரிவுபடுத்தும் நோக்கில் கடந்த 2011ஆம் ஆண்டு ‘திங்க் & லேர்ன் ’என்ற நிறுவனத்தை தொடங்கினார். இதன்மூலம் இணையதள வாயிலாக மாணவர்களுக்கு பயிற்சியளிக்க ஆரம்பித்தார்.

இதனைத் தொடர்ந்து 2015ஆம் ஆண்டு இவர் ‘பைஜூ’ஸ்’ என்ற செயலியை அறிமுக செய்தார். இந்த செயலி மூலம் எல்கேஜி முதல் 12 வகுப்பு வரையான பள்ளி பாடத் திட்டங்கள் எளிதான செயல்முறை விளக்கங்களாக மாணவர்களுக்கு கொடுக்கப்பட்டது. அத்துடன் பல போட்டி தேர்வுகளுக்கு தேவையான பாடத் திட்டங்கள் குறித்தும் இந்தத் செயலியில் வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டன. இந்த செயலி மாணவர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், இந்த நிறுவனம் தற்போது 6 பில்லியன் டாலர் அளவிற்கு வளர்ந்துள்ளது.

Advertisment

இந்திய ரூபாய் மதிப்பில் 413 கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டும் மிகப்பெரிய நிறுவனமாக இது தற்போது மாறியுள்ளது. இந்த நிறுவனத்தின் வருமானம் தற்போது 400 கோடியை தாண்டியுள்ள நிலையில், ரவீந்திரன் இந்த நிறுவனத்தின் 21 சதவீத பங்குகளை தன் வசம் வைத்துள்ளார். இதன்மூலம் இந்தியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவரும் தற்போது இணைந்துள்ளார். இதுமட்டுமல்லாமல் இந்திய கிரிக்கெட் அணியின் ஸ்பான்சராகவும் இவரது பைஜூஸ் நிறுவனம் தற்போது ஒப்பந்தமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தனது 29 ஆவது வயதில் சாதாரண ஆசிரியராக இருந்த ஒருவர், தனது 37 ஆவது வயதில் இந்தியாவே திரும்பி பார்க்கும் ஒரு மிகப்பெரிய கோடீஸ்வரராக மாறியிருப்பது பல இளைஞர்களுக்கும் உத்வேகம் அளிப்பதாக உள்ளதாக பலரும் தெரிவித்து வருகின்றனர்.