Skip to main content

இடைக்கால பட்ஜெட் என்றால் என்ன?

Published on 29/01/2019 | Edited on 29/01/2019

 

bb

 

தினசரி காலையில் செய்தித்தாள்களை பார்க்கும்போது வணிகம் பக்கத்தில் இடைக்கால பட்ஜெட் பற்றிய செய்திகள் தொடர்ந்து வந்த வண்ணம் இருக்கும். மத்திய பட்ஜெட் தெரியும் இதுவென்ன இடைக்கால பட்ஜெட்?.

 

பட்ஜெட் என்பது ஒரு நிதியாண்டிற்கு தேவையான நிதி, மக்கள் நலத்திட்டங்களுக்காக செலவிடப்போகும் நிதி மற்றும் முதலீடு செய்யப்போகும் தொகையின் விவரம், மேலும் கடந்த நிதியாண்டில் செலவிட்டதும், முதலீடு செய்ததன் மூலம் எவ்வளவு வருமானம் அரசுக்கு வந்திருக்கிறது என்பதையும் தெரிவிப்பதுதான் பட்ஜெட். இது கடந்த 2016-ம் ஆண்டு வரை பிப்ரவரி மாதத்தின் கடைசி தேதியன்று தாக்கல் செய்யப்பட்டுவந்தது. ஆனால் 2017-ம் ஆண்டு இந்த நடைமுறையை ஆளும் பாஜக அரசு மாற்றி அமைத்தது. 2017-ம் ஆண்டு மத்திய பட்ஜெட் முதல் முறையாக பிப்ரவரி மாதம் ஒன்றாம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. மேலும், அதன் பின் அதுவே வழக்கமாகவும் கடைபிடிக்கப்பட்டுவருகிறது.   

 

மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசாங்கத்தின் ஐந்தாண்டு ஆட்சிக்காலம் முடியும் தருவாயில் அடுத்து எந்த கட்சி ஆட்சிக்கு வரும், அவர்கள் என்ன வகையான திட்டங்களுக்கு மக்களின் பணத்தை செலவிடுவார்கள் என்பது யாருக்கும் தெரியாது. அதனால், தற்போது ஆட்சியில் இருக்கும் அரசு தனது ஆட்சிக்காலம் வரை மட்டும் மக்கள் நலத்திட்டத்திற்கும், மற்ற இதர செலவுகளுக்கும் தேவையான நிதியை ஒதுக்கி அதிலிருந்து அரசு செலவிடப்போகும் நிதி விவரங்களை தெரிவிப்பதே இடைக்கால பட்ஜெட். இதுபோன்ற சூழ்நிலையில் இரண்டு வகையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் ஒன்று இடைக்கால பட்ஜெட் மற்றொன்று செலவு அனுமதி கோரிக்கை (vote on account). 

 


ஏப்ரல் இறுதி அல்லது மே மாதம் தொடக்கத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ளது. இதில் எந்தக் கட்சி ஆட்சியை அமைக்கப்போகிறது என்று யாருக்கும் தெரியாது. அதனால், தற்போது ஆட்சியில் இருக்கும் பாஜக அரசு அடுத்த ஆட்சியாளர் யாரென மக்கள் தேர்ந்தெடுக்கப்போகும் அந்த காலம் வரை செலவிடப்போகும் நிதி விவரங்களை தெரிவிக்கப்போகும் தற்காலிக பட்ஜெட்டே இடைக்கால பட்ஜெட். எப்போதும் நிதி அமைச்சர் மத்திய பட்ஜெட் மற்றும் இடைக்கால பட்ஜெட் ஆகியவற்றை தாக்கல் செய்வார். அந்த வகையில் தற்போதைய நிதி அமைச்சரான அருண் ஜெட்லிதான் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்யவேண்டும். ஆனால், அவர் உடல் நலக்குறைவால் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளதால் நிதித்துறையையும் கூடுதலாக கவணித்துவரும் இரயில்வேத்துறை அமைச்சர் பியுஷ் கோயல் இந்த முறை இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வார் என எதிர் பார்க்கப்படுகிறது.  

 

pp

 


இடைக்கால பட்ஜெட்:
 

இடைக்கால பட்ஜெட்டில் வருமானவரி குறித்த மாற்றங்கள், வரவு செலவு திட்டம், அரசின் சமீபகால செயல்பாடு, எதிர்கால திட்டங்கள் மற்றும் அரசின் தொலை நோக்குக் கொள்கைகள் ஆகியவை எதிர்பார்க்கலாம் அதனை அரசு கொண்டுவருவதற்கும் அனுமதியுண்டு. அதேசமயம் இதில் வருமானவரி விகிதத்தில் மட்டும் மாற்றம் கொண்டுவர அரசு கொஞ்சம் சிந்திக்கும். காரணம், இடைக்கால பட்ஜெட்டில் கொண்டுவரும் வருமானவரி மாற்றங்களை அடுத்து வரும் அரசு மாற்றி அமைக்க இடமுள்ளதால், இடைக்கால பட்ஜெட்டில் அவ்வளவு எளிதில் மாற்றங்களை அரசு கொண்டுவராது.  

 


செலவு அனுமதி கோரிக்கை (vote on account):
 

இது முற்றிலும் இடைக்கால பட்ஜெட்டில் இருந்து மாறுப்பட்டது. காரணம் இடைக்கால பட்ஜெட் என்பது பொது பட்ஜெட் போலவே தாக்கல் செய்யப்பட்டு நடைமுறைக்கு எளிதில் கொண்டுவந்துவிடலாம். ஆனால் இந்த செலவு அனுமதி கோரிக்கை என்பது அரசு கருவூலத்தில் இருக்கும் நிதியை செலவு செய்ய கோரிக்கை விடுவது. இது நடைமுறைக்கு வரவேண்டும் என்றால், நிதியாண்டு தொடக்கமான ஏப்ரல் ஒன்றாம் தேதிக்கு முன் பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தி குடியரசுத் தலைவரிடம் இருந்து ஒப்புதலும் பெற வேண்டும். அதே சமயம் செலவு அனுமதி கோரிக்கையின் மூலம் நிதி பெறும்போது, அரசு புதிய திட்டங்களையோ, புதிய வரி விதிப்பு முறையையோ அல்லது வரி குறைப்பு நடவடிக்கையையோ எடுக்க முடியாது. ஏற்கனவே இருக்கும் திட்டங்களுக்கு தேவையான நிதியை மட்டுமே பெற முடியும். அதனால் பெரும்பாலும் அரசு இடைக்கால பட்ஜெட்டையே தாக்கல் செய்யும்.  

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சென்னை மாநகராட்சி பட்ஜெட் இன்று தாக்கல்

Published on 21/02/2024 | Edited on 21/02/2024
Chennai Corporation budget tabled today

இந்த ஆண்டுக்கான தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் கடந்த 12 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 2024 - 2025 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று முன்தினம்(19.02.2024) காலை 10 மணியளவில் தாக்கல் செய்தார். அதன்படி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு புதிய திட்டங்களை அறிவித்தார். 

இதனைத் தொடர்ந்து, சட்டப்பேரவையில் நேற்று (20-02-24) 2024 - 2025ஆம் ஆண்டுக்கான தமிழக வேளாண் பட்ஜெட்டை தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இந்த நிலையில், சென்னை மாநகராட்சியின் 2024 - 2025ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று (21-02-24) தாக்கல் செய்யப்படவுள்ளது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் 2023 - 2024ஆம் ஆண்டுக்கான விரிவான பட்ஜெட்டை மேயர் பிரியா தாக்கல் செய்தார். அந்த பட்ஜெட்டில், ‘மக்களை தேடி மேயர்’ உள்ளிட்ட பல்வேறு புதிய திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில், சென்னை மாநகராட்சியின் 2024 - 2025ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை கூட்டரங்கில் இன்று (21-02-24) காலை 10 மணிக்கு மேயர் பிரியா தாக்கல் செய்கிறார். 

இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டில், பள்ளி, கல்வி, விளையாட்டு, திறன் மேம்பாடு உள்ளிட்ட பணிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதனிடையே, இன்று தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் மீதான விவாதம் நாளை (22-02-24) நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

“மண் வளத்தை காக்க புதிய திட்டம்” - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

Published on 20/02/2024 | Edited on 20/02/2024
Minister MRK Panneerselvam says Government will procure agricultural produce

இந்த ஆண்டுக்கான தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் கடந்த 12 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 2024 - 2025 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று (19.02.2024) காலை 10 மணியளவில் தாக்கல் செய்தார். அதன்படி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு புதிய திட்டங்களை அறிவித்தார்.

இந்த நிலையில், சட்டப்பேரவையில் இன்று (20-02-24) 2024 - 2025ஆம் ஆண்டுக்கான தமிழக வேளாண் பட்ஜெட்டை, தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்,  தாக்கல் செய்தார். இதனையடுத்து அவர் பேசியதாவது, “2020-2021ம் ஆண்டில் 152 லட்சம் ஏக்கராக இருந்த வேளாண் சாகுபடி பரப்பு, 155 லட்சம் ஏக்கராக உயர்ந்துள்ளது. 2022-23ம் ஆண்டில் உணவு தானிய உற்பத்தி 116 மெட்ரிக் டன்னாக அதிகரித்துள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் நிறைவேற்றப்படாமல் இருந்த பாசன மின் இணைப்பிற்கான விண்ணப்பங்களில், கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 1.50 லட்சம் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் நடப்பாண்டிலும் 50,000 மின் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு 45 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. வேளாண் பணிகளுக்கான ஊதியம் தற்போது அதிகமாக உள்ளது. இதனை எதிர்கொள்ள வேளாண் பணிகளுக்கு தேவையான அனைத்து வகையான வேளாண் இயந்திரங்களும், கருவிகளும் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்பட்டு வருகின்றன. கலைஞர் வேளாண் திட்டம் 7,075 கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்க, வேளாண் பொருட்களை தமிழ்நாடு அரசே கொள்முதல் செய்கிறது. 

கடந்த டிசம்பரில், தென்மாவட்டங்களில் பெய்த மழையால் ஏற்பட்ட பயிர் சேதத்தால் பாதிக்கப்பட்ட 2 லட்சம் விவசாயிகளுக்கு விரைவில் நிவாரணம் வழங்கப்படும். இதற்காக 208 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 10,000 விவசாயிகளுக்கு தலா இரண்டு மண்புழு உரப்படுக்கைகள் வழங்கிட 6 கோடி மானியம் வழங்கப்படும். பூச்சி மேலாண்மை செய்வது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கப்படும். அமிலம் கலந்த நிலத்தை சீர்படுத்த ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பூச்சிநோய் தாக்கத்தை கட்டுப்படுத்த 10 லட்சம் வேப்ப மர கன்றுகள் இலவசமாக வழங்கப்படும்.

Minister MRK Panneerselvam says Government will procure agricultural produce

வரும் நிதியாண்டில் 127 லட்சம் மெட்ரிக் டன் உணவு உற்பத்திக்கு இலக்கு நிர்ணயித்துள்ளது. மண்வளத்தை பேணிக் காக்கவும், மக்கள் நலன் காக்கும் விதமான உயிர் வேளாண்மை போன்ற அனைத்து செய்முறைகளையும் ஊக்கப்படுத்த ‘முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மண்ணுயிர் காப்போம் திட்டம்’ என்ற புதிய திட்டம் ரூ.206 கோடி நிதியில் செயல்படுத்தப்படும். ஆடு, மாடு, கோழி, மீன் வளர்ப்போருக்கு நடைமுறை முதலீட்டுக் கடனுக்கான வட்டி மானியத்திற்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பயிற்சி பெற்ற பண்ணை மகளிர் சுய உதவிக் குழுக்கள் தென்னை நாற்றுப்பண்ணைகள் அமைத்திட ரூ.2.40 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  உணவு பாதுகாப்பினை உறுதி செய்யும் உணவு மானியத்திற்கு ரூ.10,500 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். 

தமிழ்நாடு அரசின் நெல் கொள்முதல் ஊக்கத் தொகை வழங்குவதற்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். 2,482 கிராம ஊராட்சிகளில் 2 லட்சம் விவசாயிகளின் நிலத்தில் மண் பரிசோதனைக்கு 6.27 கோடி நிதி ஒதுக்கீடு. மானாவாரி நிலங்களில் உற்பத்தி ஊக்குவிப்பு திட்டம் வழிவகுத்துள்ளது. சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் பயிரிட ரூ.36 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். பஞ்சகவ்யம், மண்புழு  உரம் தயாரித்து விற்பனை செய்ய ஆர்வமுள்ள குழுக்களுக்கு ரூ.1 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். சிறிய, பெரிய நாற்றங்கால் அமைக்க வேளாண் காடுகள் திட்டத்திற்கு ரூ.13 கோடி ஒதுக்கப்படும். ஒருங்கிணைந்த பண்ணை தொடங்க ரூ.42 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். 

Minister MRK Panneerselvam says Government will procure agricultural produce

வாழை, பப்பாளி உள்ளிட்ட பழ வகைகளை வீடுகள் மற்றும் தோட்டங்களில் வளர்க்க ஊக்கிவிக்கப்படும். நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் சீவன் சம்பா பாரம்பரிய நெல் இரகங்கள் 1000 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்ய விதை விநியோகம் செய்யப்படும். எண்ணெய் வித்துப் பயிர்களின் சாகுபடியை விரிவாக்கம் செய்திட ரூ.45 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். துவரை சாகுபடியை 50,000 ஏக்கர் பரப்பில் செயல்படுத்த ரூ. 17.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். நெல் ஜெயராமன் மரபுசார் நெல் இரகங்களை பாதுகாக்க 200 மெ.டன் பாரம்பரிய நெல் இரகங்கள் உற்பத்தி செய்யப்பட்டு 10,000 ஏக்கரில் சாகுபடி மேற்கொள்ள ரூ. 50 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.  ரூ. 5 கோடி மாநில நிதியில் 100 உழவர் அங்காடிகள் செயல்படுத்தப்படும். தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்றி, விவசாயிகளுக்கு கொடுக்க ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட கிராம ஊராட்சிகளில் ரூ.200 கோடி நிதியில் தொடர்ந்து செயல்படுத்தப்படும். அனைத்து பயிர்களின் உற்பத்தியில் தன்னிறைவு பெறும் நோக்கில் 4,75,000 பரப்பில் அதிகரிக்க ரூ.40.27 கோடி ஒன்றிய மானிய நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

சூரியகாந்தி பயிர் விரிவாக்கத்திற்கு ரூ. 2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். வேளாண் உற்பத்தி தரமான விதைகளை பயன்படுத்தினால் 15% மகசூலை அதிகரிக்கலாம். மொத்தம் 15, 810 விதை வகைகளை 50 முதல் 60% தள்ளுபடியில் விவசாயிகளுக்கு வழங்க ரூ.35 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். துத்தநாகம் ஜிப்சம் வாங்க ரூ.9 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். 2023-2024 அரவைப் பருவத்திற்கு சர்க்கரை ஆலைகளுக்கு பதிவு செய்து கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகையாக டன் ஒன்றுக்கு ரூ.215 வழங்கப்படும். 2024-2025 ஆம் ஆண்டில் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்த ரூ.1,775 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். ஊட்டச்சத்து மிகுந்த சிறுதானியங்களின் சாகுபடிப் பரப்பு மற்றும் உற்பத்தித் திறனை அதிகரிக்க ரூ.65.30 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். “ஒரு கிராமம் ஒரு பயிர்” திட்டம் 15,280 வருவாய் கிராமங்களில் செயல்படுத்தப்படும்.

விதைப்பு முதல் அறுவடை வரை அனைத்து தொழில்நுட்பங்கள் குறித்த செயல் விளக்கங்கள் இடம்பெறும். நிரந்தர பூச்சி கண்காணிப்புத் திடல்கள் அமைக்கப்படும். ஆதிதிராவிடர், பழங்குடினத்தைச் சார்ந்த சிறு குறு விவசாயிகளுக்கு 20% கூடுதல் மானியம் வழங்கப்படும். பருத்தி சாகுபடி பெருக்கத்தை அதிகரிக்க 14.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். வருவாய் இழப்பில் இருந்து மீண்டு வர ரூ.1,775 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பகுதிசார் தோட்டக்கலைப் பயிர் சாகுபடியினை ஊக்குவிக்க ரூ.2.70 கோடி நிதியில் விவசாயிகளுக்கு நடவுச்செடிகள் வழங்கப்படும்.” என்று கூறினார்.