ADVERTISEMENT

புதிய தலைவராக பிரிஜ் பூஷன் சிங்கின் உதவியாளர்; சாக்‌ஷி மாலிக் கண்ணீருடன் வெளியிட்ட அதிர்ச்சி அறிவிப்பு

06:03 PM Dec 21, 2023 | mathi23

இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவராகச் செயல்பட்டு வந்த பாஜக எம்.பி. பிரிஜ் பூஷன் சரண் சிங் மற்றும் தேசியப் பயிற்சி முகாமில் உள்ள பயிற்சியாளர்கள், நடுவர்கள் ஆகியோர் மல்யுத்த வீராங்கனைகளுக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் குற்றம் சாட்டியிருந்தார். ஆனால் பிரிஜ்பூஷன் சரண் சிங் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால் மல்யுத்த வீராங்கனைகள் டெல்லி ஜந்தர்மந்தரில் தொடர் போராட்டம் நடத்தினர். அதன்பின்பு பாஜக எம்.பி பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் துன்புறுத்தல் (354 ஏ) பின்தொடர்தல் (354 டி), பாலியல் ரீதியாகப் பலவந்தப்படுத்துதல் (354) என்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

ADVERTISEMENT

இதையடுத்து எம்.பி. பிரிஜ் பூஷன் சிங்கை எம்.பி பதவியில் இருந்து நீக்கி உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்றும் புதிய சம்மேளனத் தலைவராக ஒரு பெண்ணை நியமிக்க வேண்டும் என்றும் மீண்டும் மல்யுத்த வீராங்கனைகள் போராட்டத்தில் குதித்தனர். பின்னர் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பின்னர் மல்யுத்த வீரர்கள் தங்களது போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக அறிவித்தனர்.

ADVERTISEMENT

இதனைத் தொடர்ந்து, கடந்த ஜூன் 15 ஆம் தேதி பிரிஜ் பூஷன் சிங் மீது டெல்லி போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இது தொடர்பான விசாரணை நீதிமன்றத்திற்கு வந்தபோது, டெல்லி போலீஸ் தரப்பிலிருந்து வாதிட்ட வழக்கறிஞர், “எம்.பி. பிரிஜ் பூஷன் சிங் கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் மல்யுத்த வீராங்கனைகளிடம் பாலியல் ரீதியாகத் துன்புறுத்த முயன்றுள்ளார்” என்று கூறி வாதிட்டார். இதனைத் தொடர்ந்து வாதங்களைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை ஒத்திவைப்பதாக உத்தரவிட்டார். இது தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில், பிரிஜ் பூஷன் சிங்கின் நெருங்கிய உதவியாளரான சஞ்சய் சிங் புதிய சம்மேளனத் தலைவராக வெற்றி பெற்றுள்ளார். இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய பிரிஜ் பூஷன் சிங், “இது எனது தனிப்பட்ட வெற்றி அல்ல. நாட்டின் மல்யுத்த வீரர்களின் வெற்றி. புதிய கூட்டமைப்பு உருவான பிறகு, கடந்த 11 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மல்யுத்த போட்டிகள் மீண்டும் தொடங்கும் என நம்புகிறேன்” என்று கூறினார்.

இதனைத் தொடர்ந்து, ஒலிம்பிக் பதக்கம் வென்ற சாக்‌ஷி மாலிக், வினேஷ் போகட் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர். அப்போது பேசிய வினேஷ் போகட், “இங்கு குறைந்தபட்ச எதிர்பார்ப்புகள் உள்ளன. ஆனால், எங்களுக்கு நீதி கிடைக்கும் என்று நம்புகிறோம். மல்யுத்தத்தின் எதிர்காலம் இருளில் மூழ்கியிருப்பது வருத்தமளிக்கிறது. எங்கள் துயரத்தை யாரிடம் கூறுவது? நாங்கள் இன்னும் போராடிக் கொண்டிருக்கிறோம்” என்று கூறினார்.

இதையடுத்து பேசிய சாக்‌ஷி மாலிக், “நாங்கள் சம்மேளனத் தலைவராக ஒரு பெண் இருக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம். ஒரு பெண் தலைவராக இருந்தால், இதுபோன்ற துன்புறுத்தல் நடக்காது. நாங்கள் பலத்துடன் போராடினோம். ஆனால், இந்த போராட்டம் தொடரும். புதிய தலைமுறையின் மல்யுத்த வீரர்கள் போராட வேண்டும். நாங்கள் 40 நாட்களாக சாலைகளில் தூங்கினோம். நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் ஏராளமானோர் எங்களுக்கு ஆதரவாக வந்தனர். பிரிஜ் பூஷன் சிங்கின் தொழில் பங்குதாரரும், நெருங்கிய உதவியாளரும் சம்மேளனத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டால் நான் மல்யுத்தத்தை விட்டு விலகுகிறேன்” என்று கூறி அழுதுகொண்டே அந்த இடத்தை விட்டுச் சென்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT