Skip to main content

புதிய தலைவராக பிரிஜ் பூஷன் சிங்கின் உதவியாளர்; சாக்‌ஷி மாலிக் கண்ணீருடன் வெளியிட்ட அதிர்ச்சி அறிவிப்பு

Published on 21/12/2023 | Edited on 21/12/2023
Brij Bhushan Singh's assistant as new president at WFI and sakshi malik says i quit wrestling

இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவராகச் செயல்பட்டு வந்த பாஜக எம்.பி. பிரிஜ் பூஷன் சரண் சிங் மற்றும் தேசியப் பயிற்சி முகாமில் உள்ள பயிற்சியாளர்கள், நடுவர்கள் ஆகியோர் மல்யுத்த வீராங்கனைகளுக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் குற்றம் சாட்டியிருந்தார். ஆனால் பிரிஜ்பூஷன் சரண் சிங் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால் மல்யுத்த வீராங்கனைகள் டெல்லி ஜந்தர்மந்தரில் தொடர் போராட்டம் நடத்தினர். அதன்பின்பு பாஜக எம்.பி பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் துன்புறுத்தல் (354 ஏ) பின்தொடர்தல் (354 டி), பாலியல் ரீதியாகப் பலவந்தப்படுத்துதல் (354) என்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 

இதையடுத்து எம்.பி. பிரிஜ் பூஷன் சிங்கை எம்.பி பதவியில் இருந்து நீக்கி உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்றும் புதிய சம்மேளனத் தலைவராக ஒரு பெண்ணை நியமிக்க வேண்டும் என்றும் மீண்டும் மல்யுத்த வீராங்கனைகள் போராட்டத்தில் குதித்தனர். பின்னர் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பின்னர் மல்யுத்த வீரர்கள் தங்களது போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக அறிவித்தனர். 

இதனைத் தொடர்ந்து,  கடந்த ஜூன் 15 ஆம் தேதி பிரிஜ் பூஷன் சிங் மீது டெல்லி போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இது தொடர்பான விசாரணை நீதிமன்றத்திற்கு வந்தபோது, டெல்லி போலீஸ் தரப்பிலிருந்து வாதிட்ட வழக்கறிஞர், “எம்.பி. பிரிஜ் பூஷன் சிங் கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் மல்யுத்த வீராங்கனைகளிடம் பாலியல் ரீதியாகத் துன்புறுத்த முயன்றுள்ளார்” என்று கூறி வாதிட்டார். இதனைத் தொடர்ந்து வாதங்களைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை ஒத்திவைப்பதாக உத்தரவிட்டார். இது தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில், இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில், பிரிஜ் பூஷன் சிங்கின் நெருங்கிய உதவியாளரான சஞ்சய் சிங் புதிய சம்மேளனத் தலைவராக வெற்றி பெற்றுள்ளார். இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய பிரிஜ் பூஷன் சிங், “இது எனது தனிப்பட்ட வெற்றி அல்ல. நாட்டின் மல்யுத்த வீரர்களின் வெற்றி. புதிய கூட்டமைப்பு உருவான பிறகு, கடந்த 11 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மல்யுத்த போட்டிகள் மீண்டும் தொடங்கும் என நம்புகிறேன்” என்று கூறினார். 

இதனைத் தொடர்ந்து, ஒலிம்பிக் பதக்கம் வென்ற சாக்‌ஷி மாலிக், வினேஷ் போகட் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர். அப்போது பேசிய வினேஷ் போகட், “இங்கு குறைந்தபட்ச எதிர்பார்ப்புகள் உள்ளன. ஆனால், எங்களுக்கு நீதி கிடைக்கும் என்று நம்புகிறோம். மல்யுத்தத்தின் எதிர்காலம் இருளில் மூழ்கியிருப்பது வருத்தமளிக்கிறது. எங்கள் துயரத்தை யாரிடம் கூறுவது? நாங்கள் இன்னும் போராடிக் கொண்டிருக்கிறோம்” என்று கூறினார்.

இதையடுத்து பேசிய சாக்‌ஷி மாலிக், “நாங்கள் சம்மேளனத் தலைவராக ஒரு பெண் இருக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம். ஒரு பெண் தலைவராக இருந்தால், இதுபோன்ற துன்புறுத்தல் நடக்காது. நாங்கள் பலத்துடன் போராடினோம். ஆனால், இந்த போராட்டம் தொடரும். புதிய தலைமுறையின் மல்யுத்த வீரர்கள் போராட வேண்டும். நாங்கள் 40 நாட்களாக சாலைகளில் தூங்கினோம். நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் ஏராளமானோர் எங்களுக்கு ஆதரவாக வந்தனர். பிரிஜ் பூஷன் சிங்கின் தொழில் பங்குதாரரும், நெருங்கிய உதவியாளரும் சம்மேளனத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டால் நான் மல்யுத்தத்தை விட்டு விலகுகிறேன்” என்று கூறி அழுதுகொண்டே அந்த இடத்தை விட்டுச் சென்றார். 

சார்ந்த செய்திகள்

Next Story

டெல்லி காங்கிரஸ் தலைவர் ராஜினாமா!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Delhi Congress president resigns

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிவடைந்துள்ளது.

இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. அதே சமயம் இந்தியா கூட்டணி சார்பில் டெல்லியில் ஆம் ஆத்மி - காங்கிரஸ் இணைந்து போட்டியிடுகின்றன. இந்நிலையில் ஆம் ஆத்மி உடனான கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து அரவிந்தர் சிங் லவ்லி ராஜினாமா செய்தார்.

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு அரவிந்தர் சிங் லவ்லி எழுதியுள்ள கடிதத்தில், “காங்கிரஸ் கட்சியின் மீது பொய்யான, இட்டுக்கட்டப்பட்ட மற்றும் தவறான ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்துவதன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒரு கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைப்பது, கட்சியின் கொள்கைக்கு எதிரானது. மேலும் இதனைப் பொருட்படுத்தாமல் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் கட்சி முடிவெடுத்துள்ளது. எனவே தனது பதவியை ராஜினாமா செய்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

“என்னை அழிக்க நடவடிக்கை” - உச்சநீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் பதில்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Arvind Kejriwal's response in the Supreme Court on Action to destroy

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9 முறை அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பியும், அவர் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். இது தொடர்பாக அவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த மார்ச் மாதம் 21 ஆம் தேதி(21.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாதென உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. மேலும் முன் ஜாமீன் வழங்கவும் டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்திருந்தது. இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் அன்றைய தினமே (21.03.2024) அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே தன்னுடைய கைது நடவடிக்கையை ‘சட்டவிரோத கைது’ என அறிவிக்கக் கோரியும், ஜாமீன் கோரியும் கெஜ்ரிவால் தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் கெஜ்ரிவால் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து கடந்த 9 ஆம் தேதி (09.04.2024) உத்தரவிட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் தன்னைக் கைது செய்ததை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை நிராகரித்த டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் கடந்த 10 ஆம் தேதி (10.04.2024) மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்திருந்தார். 

இதனையடுத்து, இந்த வழக்கு நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த 15ஆம் தேதி விசாரனைக்கு வந்த போது, ‘தன்னை தேர்தல் பிரச்சாரத்தில் இருந்து தடுப்பதற்காகவே இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் வாதிடப்பட்டது. இதனை பதிவை செய்து கொண்ட நீதிமன்றம், இந்த வழக்கு குறித்து அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியது. அந்த நோட்டீஸுக்கு பதிலளித்த அமலாக்கத்துறை, ‘அரவிந்த் கெஜ்ரிவால் தான் இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியாக நாங்கள் கருதுகிறோம். எங்களுடைய விசாரணைக்கு அரவிந்த் கெஜ்ரிவால் ஒத்துழைப்பு தரவில்லை. அதனால், இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்’ எனத் தெரிவித்து கோரிக்கையை முன்வைத்தது. 

 Arvind Kejriwal's response in the Supreme Court on Action to destroy

இந்த நிலையில், அமலாகக்த்துறை அளித்த அந்த பதிலுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் , ‘அரசியல் எதிரிகளை பழிவாங்குவதற்காக அமலாக்கத்துறையை மத்திய அரசு பயன்படுத்துகிறது. தேர்தல் நேரத்தில் அரசியல் செயல்பாடுகள் உச்சத்தில் இருக்கும். அந்த நேரத்தில் அவர்களுக்கு சமமான அரசியல் எதிரியான அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்ததன் மூலம், தேர்தல் சமநிலையை குலைக்க மத்திய அரசு முயல்கிறது.

அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்து கட்சிப் பணிகளை முடக்க மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. கெஜ்ரிவால் கைது மூலம் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் முறை என்பது கேள்விக்குறியாகியுள்ளது. இந்த கைது முழுக்க முழுக்க அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகும். அதுமட்டுமல்லாமல், அரவிந்த் கெஜ்ரிவால் என்ற தனி மனிதனையும், ஆம் ஆத்மி கட்சியையும் அழிப்பதற்கான யுக்தியாகத் தான் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதனால், கெஜ்ரிவாலை உடனடியாக சிறையில் இருந்து விடுவிப்பதற்கான உத்தரவை பிறப்பிக்க வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.