Skip to main content

சொகுசு கார் விபத்து சம்பவம்; ‘மனிதன்’ படப் பாணியில் நடந்த பேரம்?

Published on 25/05/2024 | Edited on 25/05/2024
The boy's grandfather was arrested for Luxury car accident incident in pune

மகாராஷ்டிரா மாநிலம், புனேவில் உள்ள கல்யாணி நகர் பகுதியைச் சேர்ந்தவர் விஷால் அகர்வால். ரியல் எஸ்டேட் தொழிலதிபரான இவருக்கு வேந்தாந்த் அகர்வால் என்ற 17 வயது மகன் உள்ளார். இவர் கடந்த 19ஆம் தேதி அதிகாலை 3 மணியளவில் தனது நண்பர்களுடன், தனியார் ஹோட்டலில் மது அருந்திவிட்டு தனது தந்தையின் சொகுசு வாகனத்தில் அதிவேகமாக வந்துள்ளார். 

அப்போது கல்யாணி நகர் ஜங்சன் பகுதியில் வேந்தாந்த் அகர்வால் அதிவேகமாக ஓட்டி வந்த கார், முன்னே சென்ற பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்தக் கோர விபத்தில், பைக்கில் பயணித்த ஐ.டி ஊழியர்களான அனுஷ் மற்றும் கோஷ்டா ஆகிய 2 பேரும் தூக்கி வீசப்பட்டு மற்றொரு காரில் விழுந்தனர். இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த ஐ.டி. ஊழியர்களான 2 பேரும் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதனைக் கண்ட அங்கிருந்தவர்கள், விபத்தை ஏற்படுத்திய சிறுவன் வேந்தாந்த் அகர்வாலை பிடித்து வைத்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வேந்தாந்த் அகர்வாலை கைது செய்து விசாரணை நடத்தினர். 

இதனையடுத்து, கைது செய்யப்பட்ட வேந்தாந்த் அகர்வாலை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று பீட்சா, பிரியாணி வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து, 20ஆம் தேதி சிறார் தொடர்பான குற்றங்களை விசாரிக்கும் சிறப்பு  நீதிமன்றத்தில் வேதாந்த் அகர்வால் ஆஜர்படுத்தப்பட்டார். அங்கு அவரை விசாரித்த நீதிமன்றம், அவருக்கு உடனடியாக ஜாமீன் வழங்கியது. விபத்தை ஏற்படுத்தி ஐ.டி ஊழியர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு, சிறுவனுக்கு உடனடியாக ஜாமீன் வழங்கியது கடும் விமர்சனங்கள் எழுந்தது.

தொடர் விமர்சனங்களின் விளைவாக, அந்தச் சிறுவனுக்கு அளிக்கப்பட்ட ஜாமீன் ரத்து செய்யப்பட்டு சிறார் முகாமில் அடைக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து, இந்தச் சம்பவம் தொடர்பாக, போலீசார் சிறுவனின் தந்தை விஷால் அகர்வாலை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதற்கிடையே, சிறுவன் வேந்தாந்த் அகர்வாலுக்கு மது வழங்கியதற்காக ஹோட்டல் உரிமையாளர் மற்றும் மேலாளர்கள் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், சிறுவன் வேந்தாந்த் அகர்வாலின் தாத்தா சுரேந்திரா அகர்வாலை போலீசார் கைது செய்துள்ளனர். 

குடும்ப கார் ஓட்டுநரான கங்காராமை மிரட்டி, கார் விபத்து பழியை ஏற்க சுரேந்திரா அகர்வாலை வற்புறுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதன் அடிப்படையில், சிறுவனின் தாத்தா சுரேந்திரா அகர்வால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் சாட்சிகளைக் கலைக்க முயற்சி நடந்ததாக கூறப்படும் நிலையில், காவல்துறை தரப்பில் காட்டப்பட்ட சுணக்கத்தை விசாரித்து சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனப் புனே காவல் ஆணையர் அமிதேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்