
கேரள மாநிலம் கொல்லம் பாருப்பள்ளி புத்தன் வீடு பகுதியைச் சேர்ந்தவர் ஜிதன்(25). இவர் தனது தாத்தாவிற்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் கொல்லத்தில் உள்ள ஒரு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சையில் இருக்கும் போது தாத்தாவை இளைஞர் ஜிதன் தான் மருத்துவமனைக்குச் சென்று கவனித்து வந்தார். அப்போது அந்த மருத்துவக்கல்லூரியில் நர்சிங் படித்து வந்த குமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணுடன் ஜிதனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
நாளடைவில் இந்த பழக்கம் இருவருக்கும் இடையே காதலாக மாறியுள்ளது. ஜிதன் தாத்தா குணமாகி வீட்டிற்கு வந்த பிறகு இருவர்களின் காதல் தொடர்ந்து கொண்டே இருந்துள்ளது. இந்த நிலையில் தான் ஜிதன் இளம்பெண்ணின் வீட்டிற்கு சென்று தாங்கள் இருவரும் காதலிப்பதாக கூறி பெண் கேட்டுள்ளார். ஆனால், இருவர்களது காதலுக்கும் இளம்பெண்ணின் வீட்டில் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து இளம்பெண்ணுக்கு வேறு ஒரு இடத்தில் திருமணம் செய்து வைக்கத் தீவிரம் காட்டினர். அதன்படி இளம்பெண்ணுக்கு வேறு ஒரு வாலிபருடன் திருமணம் பேசி முடித்து நிச்சயதார்த்தம் செய்தனர்.
இதனால் மன உடைந்த இளைஞர் ஜிதன் நேற்று முன்தினம்(20.5.2025) கேரளாவில் இருந்து இளம்பெண்ணின் வீட்டிற்கு வந்தவர், வீட்டின் பின்புறம் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த இளம்பெண், வீட்டின் குளியலறையில் இருந்த திரவத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக இளம்பெண்ணை மீட்டு அவரது பெற்றோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.