Both Houses of Parliament adjourned for the second day

இந்த வருடத்திற்கான நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் வரும் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 15 அமர்வுகள் நடைபெற உள்ளன. நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடரின் இரு அவைகளும் நேற்று காலை கூடிய சில நிமிடங்களிலேயே எதிர்க்கட்சிகள் சார்பில் மணிப்பூரில் இரு பெண்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்து உடனே விவாதிக்க அனுமதி கேட்கப்பட்டது. இரு அவைகளிலும் உடனடியாக விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டதால் இரு அவைகளிலும் கூச்சல் குழப்பம் நிலவியது. இதனால் இரு அவைகளும் கூடிய சில நிமிடங்களிலேயே ஒத்திவைக்கப்பட்டது.

Advertisment

அதனைத் தொடர்ந்து மீண்டும் மதியம் இரு அவைகளும் கூடிய நிலையில், மணிப்பூர் பெண்களுக்கு எதிராக நடந்த சம்பவம் குறித்து உடனே இரு அவைகளிலும் விசாரிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் சார்பில் மீண்டும் தொடர்ந்து முழக்கம் எழுப்பப்பட்டது. இதனால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கின. இதையடுத்து இன்று காலை வரை இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது.

Advertisment

இந்நிலையில், இன்று காலை 11 மணிக்கு மக்களவை கூடியது. அப்போது மணிப்பூர் விவகாரம் குறித்து உடனடியாக விசாரிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் சார்பில் வலியுறுத்தப்பட்டது. இதனால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து, மக்களவை நண்பகல் 12 மணி வரைக்கும் ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் மக்களவை 12 மணிக்குக் கூடியது. அப்போதும் அவையில் கடும் அமளி ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இதே நிலைமை மாநிலங்களவையிலும் நீடித்ததால் நாள் முழுவதும் மாநிலங்களவையும்ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து திங்கட்கிழமை (ஜூலை24) மீண்டும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கூட உள்ளன.