Skip to main content

பிறந்தது ‘2024’ புத்தாண்டு; நாடு முழுவதும் கோலாகல கொண்டாட்டம்

Published on 01/01/2024 | Edited on 01/01/2024
Born '2024' New Year Kolakala celebration all over the country

உலகின் பல்வேறு நாடுகளிலும் 2024 ஆம் ஆண்டிற்கான புத்தாண்டு கொண்டாட்டங்கள் இன்று மாலை முதலே களைகட்டி வந்தது. இதனையொட்டி உலகின் முதல் நாடாக இந்திய நேரப்படி மாலை 04.30 மணியளவில் நியூசிலாந்தில் 2024 ஆம் ஆண்டிற்கான புத்தாண்டு பிறந்தது. நியூசிலாந்தை தொடர்ந்து உலகின் 2 ஆவது நாடாக ஆஸ்திரேலியாவில் 2024 புத்தாண்டு பிறந்தது. இந்திய நேரப்படி மாலை 06.30 மணியளவில் ஆஸ்திரேலியாவில் 2024 ஆம் ஆண்டிற்கான புத்தாண்டு பிறந்தது.

அதே சமயம் 2024 ஆம் ஆண்டிற்கான புத்தாண்டை வரவேற்கும் விதமாக சென்னை, டெல்லி, கொல்கத்தா, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் உள்ள முக்கிய சுற்றுலா தளங்கள், பாரம்பரிய கட்டிடங்கள், விமான நிலையங்கள் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. கடற்கரைகள், கோயில்கள், தேவாலயங்கள் போன்ற பொது இடங்களில் ஏராளமான இளைஞர்கள் ஒன்று கூடி புத்தாண்டை வரவேற்க தயாராக இருந்தனர். இந்நிலையில் நள்ளிரவு 12 மணியை எட்டியதில் இருந்து புத்தாண்டை நாட்டின் பல்வேறு இடங்களில் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் பட்டாசு வெடித்து வாண வேடிக்கைகளுடன் புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர்.

ஒருவருக்கொருவர் தங்களது வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். மேலும் கேக் வெட்டி ஆட்டம் பாட்டம் என புத்தாண்டை மக்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடி வருகின்றனர். அதே வேளையில் நாட்டின் பல்வேறு இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்து போலீசார் வாகன சோதனையிலும் ஈடுபட்டு வருகின்றனர். புத்தாண்டு பிறப்பையொட்டி கோயில்கள், தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனைகளும் நடைபெற்று வருகிறது. நக்கீரன் வாசகர்களுக்கு புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். 

சார்ந்த செய்திகள்