
அண்மையாக பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மற்றும் விமானங்களுக்கு தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்ட நிலையில் திருப்பதியில் ஹோட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விட்டதால் அதில் தங்கி இருந்தவர்கள் நள்ளிரவில் பதறி அடித்துக்கொண்டு வெளியே ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஆந்திரமாநிலம் திருப்பதியில் உள்ள சில தனியார் ஹோட்டல்களுக்கு நேற்று இரவு போதைப்பொருள் கடத்தலில் கைது செய்யப்பட்டுள்ள ஜாபர் சாதிக் பெயரில் குறிப்பிட்டு ஒரு இமெயில் வந்ததாகக் கூறப்படுகிறது. இதனைப்பார்த்த ஹோட்டல்களின் உரிமையாளர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பந்தப்பட்ட ஹோட்டல்களில் பல்வேறு குழுக்களாக பிரிந்து வெடிகுண்டு நிபுணர்கள் உள்ளிட்ட போலீசார் மோப்ப நாய்களுடன் சென்று சோதனை செய்தனர்.
இந்த தகவல் அங்கு தங்கியிருந்த பக்தர்களுக்கும் பயத்தை ஏற்படுத்த அவர்கள் அலறியடித்துக்கொண்டு ஹோட்டலை விட்டு வெளியே வந்தனர். போலீசார் நடத்திய சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் போலியானது என்று தெரிய வந்தது. வெடிகுண்டு மிரட்டல் இமெயிலை அனுப்பியது யார் என்பது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பதியில் ஹோட்டல்களில் வெடிகுண்டு இருப்பதாக வெளியான தகவல் அங்கு பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.