
‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்தியா நேற்று நள்ளிரவு ஏவுகணை தாக்குதல் நடத்தியிருப்பது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. 25 நிமிடங்கள் நடத்திய இந்த தாக்குதலில், பயங்கரவாத முகாம்கள் தரைமட்டமானது மட்டுமல்லாமல், தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகிய அமைப்புகளில் தொடர்புடைய 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் 26 சுற்றுலாப் பயணிகளை கொடூரமாக சுட்டுக்கொன்ற பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ’ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் தாக்குதல் நடவடிக்கைக்கு எதிராக காஷ்மீர் எல்லையில், பாகிஸ்தான் ராணுவத்தினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால், இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது.
இந்த நிலையில், ஜெய்ப்பூரின் சவாய் மான் சிங் (எஸ்எம்எஸ்) மைதானத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. ராஜஸ்தான் மாநில விளையாட்டு கவுன்சிலுக்கு இன்று காலை ஒரு மின்னஞ்சல் வந்துள்ளது. அதில், ‘ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் வெற்றியைக் குறிக்கும் வகையில், உங்கள் மைதானத்தில் குண்டுவெடிப்பை நடத்துவோம். முடிந்தால் அனைவரையும் காப்பாற்றிக் கொள்ளுங்கள்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அடையாளம் தெரியாத நபரிடம் இருந்து வந்த மின்னஞ்சல் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.