சர்வதேச சுற்றுலா பயணிகளை ஈர்க்கவும். ஸ்வட்ச் பாரத் திட்டம் இந்திய கடற்கரைகளில் தடம்பதிக்கவும் நீலக்கொடிகள் இந்திய கடற்கரைகளில் பறப்பது அவசியம். இந்திய கடற்கரைகளில் நீலக்கொடி பறப்பது என்பது என்ன? இதனால் யாருக்கு என்ன பயன்? இது என்ன சான்றிதழ் இந்த சான்றிதழ் உலகில் உள்ள சுற்றுலா கடற்கரைகள் எப்படி வாங்கியுள்ளன? இந்திய கடற்கரைகளில் நிலை என்ன என்பது குறித்து சுற்றுச் சூழல் மற்றும் வன ஆர்வலர் மன்னை மனோகரனிடம் இது குறித்து நக்கீரன் இணையத்திற்காக பேசினோம்..

Advertisment

blue flag

உலகில் உள்ள சுற்றுலா கடற்கரைகள், தூய்மை மற்றும் இதர சுற்றுச்சூழல் தரநிலைகளை முறையாக பேணிப் பராமரித்தால் நீலக்கொடி தர சான்றிதழ் வழங்கப்படும். 2001 ம் ஆண்டு முதல் சர்வதேச அளவில் இந்த சான்று வழங்கப்படுகிறது. சுற்றுலா கடற்கரைகளுக்கான உலகின் மிக உயரிய தரச்சான்று இது. இதை கோபன்ஹெகனில் உள்ள சுற்றுச்சூழல் கல்விக்கான அறக்கட்டளை வழங்கி வருகிறது. இந்த அறக்கட்டளை 60 நாடுகளின் உள்ள 65 நிறுவனங்கள் அங்கம் வகிக்கும் ஒரு அரசு சார அமைப்பு.

இந்த தரச்சான்றிதழ் பெற சுற்றுச்சூழல் மற்றும் சுற்றுலா செயல்பாடுகளோடு சம்மந்தப்பட்ட தூய்மை, அழகு, அடிப்படை வசதிகள், பராமரிப்பு போன்ற 33 நிபந்தனைகளை முறையாக மேற்கொள்ள வேண்டும். 1985ம்ஆண்டு இந்தத் தரநிலைகள் அந்த அமைப்பு வகுத்தது.

சுற்றுலா சேவைகள் வழங்கும் துறைமுகங்களுக்கும், படகு போக்குவரத்து அமைப்புகளுக்கும் இந்த தரச்சான்று வழங்கப்படுகிறது. இதுவரை 45 நாடுகள் இந்த சான்றுகளை பெற்று இருக்கின்றன. இதுவரை 4560 சான்றுகளை இந்த அமைப்பு வழங்கி இருக்கிறது. ஸ்பெயின் நாடு - 566, கிரீஷ் நாடு - 515, பிரான்ஸ் - 395 என நீலக்கொடி சான்றுகளை வாங்கி குவித்திருக்கின்றன. புவியியல் அமைப்பு, குறைவான மக்கள் தொகை போன்ற காரணங்கள் ஐரோப்பிய கண்டத்து கடற்கரைகளுக்கு சாதகமாக இருக்கின்றன.ஆசிய பிராந்தியத்தில் தென் கொரியா, ஜப்பான், ஐக்கிய அரபு எமிரேட் கடற்கரைகள் இந்த சான்றிதழ்கள் பெற்றவைகள்.இந்த சான்று ஆண்டுதோரும் புதுப்பிக்கப்பட வேண்டும்.

இந்திய சுற்றுலாக் கடற்கரைகள் தரம் உயர்த்தி இந்த தரச்சான்றுகள் பெற சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாறுபாட்டு அமைச்சகம் கடந்த 2017 ம் ஆண்டு நீலக் கொடித் திட்டம் உருவாக்கியது. இதற்காக தமிழ்நாட்டின் மகாபலிபுரம் கடற்கரை, குஜராத் சிவராஜ்பூர் கடற்கரை, மகாராஷ்ரா போகேவ் கடற்கரை, டையு யுனியன் பிரதேச கோக்லா கடற்கரை, கோவா மியாமர் கடற்கரை, கர்நாடகா காசர்கோடு மற்றும் உடுப்பி படுப்பிட்ரி கடற்கரை, கேரளா கோழிக்கோடு கப்பாடு கடற்கரை, புதுச்சேரி ஈடன் கடற்கரை, ஆந்திரவின் விசாகப்பட்டினம் ருசிகோண்டா கடற்கரை, ஒடிசா மாநில கோல்டன் மற்றும் கொணரக் கடற்கரைகள், அந்தமான் நிக்கோபார் என 12 கடற்கரைகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன.

இந்திய ஒருங்கிணைந்த கடலோர மேலாண்மைக்கான அமைப்புசான்று பெற முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. நடப்பு 2019 ம் ஆண்டு குஜராத்தின் சிவராஜ்பூர், டையு யுனியன் பிரதேச கோக்லா என இரண்டு இந்திய கடற்கரைகள் சான்றுக்கு விண்ணப்பித்து இருக்கின்றன. வரும் அக்டோபர் மாதம் முடிவு தெரியும்.

Advertisment

தரச்சான்று பெற ஏதுவாக மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாறுபாட்டு அமைச்சகம் சுற்றுப்புற பாதுகாப்பு சட்டம்- 1986 விதிகளின் கீழ் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், கழிப்பறைகள், உடை மாற்றும் அறைகள், இடம் பெயர்க்கும் வகையிலான சிறிய அளவு திடக்கழிவு, மற்றும் மாசுநீர் மறுசுழற்ச்சி ஆலைகள், சூரிய மின்தகடு ஒளி விளக்குகள் போன்ற வசதிகள் மேற்கொள்ள வேண்டும் என சம்மந்தப்பட்ட மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டு உள்ளது. இதற்கான அரசானை கடந்த 12 ஜீலை 2019 மத்திய அரசிதழில் (கெசட்) வெளியானது. நீலக்கொடி திட்டம் நிறைவேறுவது மாநில அரசுகளின் ஒத்துழைப்புகளை பொருத்தது.

சர்வதேச சுற்றுலா பயணிகளை ஈர்க்கவும். ஸ்வட்ச் பாரத் திட்டம் இந்திய கடற்கரைகளில் தடம்பதிக்கவும் நீலக்கொடிகள் இந்திய கடற்கரைகளில் பறப்பது அவசியம் என்றார்.