/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ramnavamini.jpg)
நாடு முழுவதும் நேற்று (17-04-24) ராம நவமி விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவையொட்டி அனைத்து மாநிலங்களில் உள்ள ராமர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
அந்த வகையில், மேற்கு வங்க மாநிலம், முர்ஷிதாபாத்தின் சக்திபூர் பகுதியில் ராம் நவமி உத்சவ் உஜ்ஜபன் கமிட்டி சார்பாக நேற்று ஊர்வலம் நடத்தினர். அப்போது, அந்த ஊர்வலத்தின் மீது சிலர் வீட்டின் மாடிகளில் இருந்து கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலின் போது, 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். உடனடியாக அங்கிருந்தவர்கள், காயமடைந்தவர்களை மீட்டு அருகே உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, கல்வீச்சு தாக்குதல் நடந்த அந்த பகுதிக்கு விரைந்த போலீசார், அங்கிருந்த கும்பல்களை கலைக்க தடியடி நடத்தியும், புகை குண்டுகளை வீசியும் நிலைமையை தன் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனை தொடர்ந்து, கலவரம் நடந்த அந்த பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராம் நவமி ஊர்வலத்தில் கலவரம் ஏற்பட்டதற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியே காரணம் என்று அங்குள்ள பா.ஜ.க குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து மேற்கு வங்க பா.ஜ.க மாநிலத் தலைவர் சுவேந்த அதிகாரி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “ கடந்த ஆண்டு ஸ்ரீராம நவமி ஊர்வலங்கள் தல்கோலா, ரிஷ்ரா மற்றும் செரம்பூர் ஆகிய இடங்களில் தாக்குதலுக்கு உள்ளானது போல், ​​இந்த ஆண்டும் மம்தா காவல்துறை ராம பக்தர்களைப் பாதுகாக்கத் தவறிவிட்டது.
நிர்வாகத்திடம் இருந்து உரிய அனுமதி பெற்ற அமைதியான ராம நவமி ஊர்வலம், சில குண்டர்களால் தாக்கப்பட்டுள்ளது. அந்த நேரத்தில், மம்தாவின் காவல்துறை குற்றவாளிகளுடன் சேர்ந்து, ஊர்வலம் திடீரென முடிவடைவதை உறுதி செய்வதற்காக ராம பக்தர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசியுள்ளது. இது மட்டுமின்றி, மாணிக்யஹார் மோரில் உள்ள சனாதானி சமூகத்தைச் சேர்ந்த கடைகளை கொள்ளையடிப்பதையும் மம்தாவின்காவல்துறை தடுக்க முடியவில்லை.
ராம நவமி ஊர்வலத்தில் கலவரம் ஏற்பட்டதற்கு மம்தா பானர்ஜியே காரணம். அவரின் ஆத்திரமூட்டும் பேச்சின் காரணமாகவே மாநிலத்தின் பல்வேறு இடங்களில் ராம நவமி ஊர்வலங்கள் சீர்குலைக்கப்பட்டன். எனவே, மேற்கு வங்கத்தில் மத விழாக்களை அமைதியான மற்றும் குற்றச் சம்பவங்கள் இல்லாமல் கொண்டாட, மாநில அரசு மாற்றப்பட வேண்டும். மேலும், ராம பக்தர்கள் தாக்கப்பட்டது தொடர்பாக என்.ஐ.ஏ விசாரணை நடத்த வேண்டும்” என்று பதிவிட்டிருந்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)