
பா.ஜ.க மாநிலத் தலைவர் முன்னிலையில் இரண்டு பா.ஜ.க நிர்வாகிகள் மோதிக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில், ஸ்ரீ பஜன்லால் ஷர்மா தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தில், பா.ஜ.க மாநிலத் தலைவராக மதன் ரத்தோர் என்பவர் பொறுப்பு வகித்து வருகிறார்.
இந்த நிலையில், ராஜஸ்தான் பா.ஜ.க அலுவலகத்தில் பாஜக மாநிலத் தலைவர் மதன் ரத்தோருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதனால், பல்வேறு மாநில பா.ஜ.க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது, பா.ஜ.க சிறுபான்மை மோர்ச்சாவின் முன்னாள் நிர்வாகி ஜாக்கி, மாநிலத் தலைவர் மதன் ரத்தோரை மேடைக்கு அழைத்துச் சென்றார். அவர் மேடையில் ஏற முயன்ற போது, மோர்ச்சாவின் மாநில பொதுச் செயலாளர் ஜாவேத் குரேஷி அவரை தடுத்தார். இதனால் ஜாக்கி, ஜாவேத் குரேஷியை அறைந்தார்.
இதில் கோபமடைந்த குரேஷியும் பதிலுக்கு, ஜாக்கியை அறைந்தார். இருவரும் மாறி மாறி தாக்கிக் கொண்டனர். இதனை பார்த்த மற்ற கட்சி நிர்வாகிகள் அவர்களை உடனடியாக பிரித்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.