BJP Siddaramaiah accused of BJP for operation lotus

மக்களவைத் தேர்தல், நாடு முழுவதும் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கவிருக்கிறது எனதேர்தல் ஆணையம் அறிவித்தது. நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறும் இந்தத் தேர்தல் நாடு முழுவதும் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற்று அதில் பதியப்படும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள், தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன.

அந்த வகையில், மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகமாநிலத்தில், ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடவுள்ளது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. அந்த வகையில், பா.ஜ.க - ஜனதா தளம் (எஸ்) கூட்டணி, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்து தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையில், கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்க்க ‘ஆபரேஷன் தாமரை’ என்ற பெயரில் பா.ஜ.க சதி திட்டம் நடத்தி வருவதாக அம்மாநில காங்கிரஸ் தரப்பினர் அவ்வப்போது குற்றச்சாட்டு வைத்து வருகின்றனர். அதே வேளையில். மக்களவைத் தேர்தலுக்கு பிறகு, முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு கவிழும் என்று பா.ஜ.க.வினர் கூறி வருகின்றனர்.

Advertisment

இந்த நிலையில், கர்நாடகா முதல்வர் சித்தராமையா, தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டி அளித்தார். அதில் பேசிய முதல்வர் சித்தராமையா, “கடந்த ஒரு வருடமாக எனது தலைமையிலான அரசை கவிழ்க்க பா.ஜ.க.வினர் முயற்சி செய்து வருகின்றனர். எங்கள் எம்.எல்.ஏக்களுக்கு ரூ.50 கோடி வரை வழங்க தயாராக இருந்தார்கள். ஆனால், அவர்களால் அதை செய்ய முடியவில்லை. எங்கள் எம்.எல்.ஏக்கள் என்றைக்குமே விட்டு செல்லமாட்டார்கள். ஒரு எம்.எல்.ஏ கூட எங்கள் கட்சியை விட்டு செல்லம்மாட்டார்கள். எனது ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில் அவர்கள் தோல்வி அடைந்துவிட்டனர்” என்று கூறினார்.