Skip to main content

விவசாயிகளின் போராட்டத்திற்கு பாஜகவின் மூத்த தலைவர் ஆதரவு!

Published on 19/12/2020 | Edited on 19/12/2020

 

birender singh

 

சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவில், மிகப்பெரிய விவசாயத் தலைவராக இருந்தவர், சர் சோட்டு ராம். இவர் பணக்காரர்களால் விவசாயிகள் சுரண்டப்படுவதை முடிவுக்கு கொண்டுவருவதற்காக, பல சட்டங்கள் இயற்றப்படவும், நடவடிக்கைகள் எடுக்கப்படவும் காரணமாக இருந்தவர். இவரது பேரன் பிரேந்தர் சிங். இவர் முன்னாள் மத்திய அமைச்சராவர். தற்போது, பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினராகவும் உள்ளார்.

 

இந்தநிலையில், பிரேந்தர் சிங் விவசாயிகளுக்கு ஆதரவாக தர்ணா போராட்டத்தில் கலந்துகொண்டு, மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடைபெறும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததோடு, டெல்லி எல்லைக்குச் சென்று போராட ஆர்வமாக இருக்கிறேன் எனக் கூறியுள்ளார்.

 

இதுகுறித்து பேசிய பிரேந்தர் சிங், “நான் விவசாயிகளுக்கு ஆதரவாக நிற்கிறேன். இது இப்போது அனைவரின் போராட்டமாகும். இது சமூகத்தின் ஒரு பிரிவுக்கு மட்டுமான போராட்டமல்ல. நான் ஏற்கனவே களத்தில் இருக்கிறேன். நான் முடிவு செய்துவிட்டேன். நான் முன் நிற்கவில்லையென்றால், மக்கள் நான் அரசியல் செய்வதாக எண்ணுவார்கள்" எனக் கூறியுள்ளார். 

 

மேலும், "நீங்கள் யாருடனும் பேசலாம். அவர் ஒரு மாணவராகவோ, பெண்ணாகவோ அல்லது தொழிலாளியாகவோ இருக்கலாம். எல்லோரும் இந்தப் போராட்டத்தைப் பற்றி கவலைப்படுகிறார்கள், ஒரு தீர்வை விரும்புகிறார்கள். கடந்த 5-6 நாட்கள் மிகவும் குளிராக உள்ளது, ஆனால் அவர்கள் திறந்தவெளியில் உட்கார்ந்திருக்கிறார்கள்" எனவும் பிரேந்தர் சிங் கூறியுள்ளார்.

 

பாஜகவின் மூத்த தலைவர் அரசின் சட்டங்களுக்கு எதிராகத் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதோடு, டெல்லி சென்று விவசாயிகளின் போராட்டத்தில் கலந்து கொள்ள இருப்பதாகக் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்