BJP rules in Delhi; Arvind Kejriwal, Manish Sisodia defeat

70 சட்டமன்றத் தொகுதிகள் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கான தேர்தல் கடந்த 5ஆம் தேதி (05.02.2025) ஒரே கட்டமாக நடைபெற்றது. தேசிய அளவில் இந்தியா கூட்டணியில் உள்ள ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சிகள், இந்த தேர்தலில் தனித்துப் போட்டியிட்டன. இதனால் ஆம் ஆத்மி, காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க என மும்முனை போட்டி நிலவியது. இதனையடுத்து நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (08.02.2025) காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன.

இதில் ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கும், பாஜகவுக்கும் இடையே தொடர்ந்து கடும் போட்டி நிலவிவந்தது. அதன்படி மதியம் 1 மணி நிலவரப்படி பாஜக 47 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி கட்சி 23 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன. முன்னதாக காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதியில் முன்னிலை வகித்த நிலையில் தற்போது பின்னடைவைச் சந்தித்துள்ளது. இதன் மூலம் டெல்லியில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக ஆட்சியமைக்கிறது.

Advertisment

அதேசமயம் புது டெல்லி தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தோல்வியைச் சந்தித்துள்ளார். கெஜ்ரிவாலை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பர்வேஷ் வர்மா 1500 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். எனவே டெல்லியின் முதல்வராக பர்வேஷ் வர்மா தேர்ந்தெடுக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஜங்புரா தொகுதியில் போட்டியிட்ட ஆம் ஆத்மி வேட்பாளரும், முன்னாள் துணை முதல்வருமான மனிஷ் சிசோடியா தோல்வி அடைந்துள்ளார். கல்காஜி தொகுதியில் போட்டியிட்ட ஆம் ஆத்மி வேட்பாளரும், முதல்வருமான அதிஷி முதலில் பின்னடைவைச் சந்தித்தார். அதன் பின்னர் முன்னிலை வகித்து வந்தார். இதனையடுத்து தற்போது வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.