BJP is ready to form the government with Chandrababu, Nitishkumar support

இந்தியாவில் ஏழு கட்டங்களாக ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. இதற்கான தேர்தல் முடிவுகள் நேற்று (04-06-24) வெளியாகின. அதில் 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றுள்ளது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பா.ஜ.க தனித்து 240 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியிருந்தாலும், கூட்டணிக்கட்சிகளில் தயவால் பா.ஜ.க கூட்டணி மூன்றாவது முறையாக ஆட்சியை அமைக்கவுள்ளது.

Advertisment

அதே சமயம் ஆந்திரப் பிரதேசத்தில் 16 மக்களவைத் தொகுதிகளை வென்ற தெலுங்கு தேசம் கட்சியும், பீகாரில் 12 மக்களவைத் தொகுதிகளை வென்ற ஐக்கிய ஜனதா தளம் கட்சியும், பா.ஜ.க ஆட்சி அமைப்பதற்கு முக்கிய பங்கு வகிக்கிறது. அதிலும், தெலுங்கு தேசம் கட்சி முதல்வர் சந்திரபாபு நாயுடு, இந்தத் தேர்தலில் ஒரு முக்கிய திருப்புமுனையாக உள்ளார். அதாவது சந்திரபாபு நாயுடுவையும், நிதிஷ்குமாரையும் தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் இந்தியா கூட்டணியினர் இறங்கியுள்ளதாகத் தகவல் வெளியானது.

Advertisment

இந்தப் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், ஆந்திராவில் முதல்வராக பதவியேற்கவிருக்கும் சந்திரபாபு நாயுடு, பா.ஜ.கவுடனான கூட்டணியை உறுதி செய்தார். அதே வேளையில் இன்று (05.06.2024) பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சியினர் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், நிதிஷ்குமாரும், சந்திரபாபு நாயுடுவும், பா.ஜ.கவிடம் பல நிபந்தனை விதிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.

இந்த நிலையில், அந்த ஆலோசனைக் கூட்டத்தில், பா.ஜ.க ஆட்சி அமைக்க சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் மற்றும் கூட்டணி கட்சிகள் ஆதரவு கடிதம் வழங்கினர். இந்தக் கூட்டத்திற்கு பிறகு குடியரசு தலைவர் திரவெளபதி முர்முவை இன்று (05.06.2024) சந்தித்து தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் தலைவர்கள் ஆட்சியமைக்க உரிமை கோர இருக்கிறது. அதன் தொடர்ச்சியாக ஜூன் 8 ஆம் தேதி மீண்டும் பிரதமர் மோடி பதவியேற்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Advertisment