ADVERTISEMENT

கல்லூரி மாணவி கொலை சம்பவம்; காங்கிரஸ் கவுன்சிலருக்கு ஆதரவாக பா.ஜ.க போராட்டம்!

12:30 PM Apr 23, 2024 | mathi23

கர்நாடகா மாநிலம், தார்வார் மாவட்டம் உப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் நிரஞ்சன் ஹிரேமட். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நிரஞ்சன் தார்வார் மாநகராட்சியில் கவுன்சிலராக பொறுப்பு வகித்து வருகிறார். இவரது மகள் நேகா ஹிரேமட் (24). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். நேகா பயின்று வந்த அதே கல்லூரியில் பெலகாவி பகுதியைச் சேர்ந்த பயாஜ் (24) என்பரும் படித்து வந்தார். இந்த நிலையில் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த பயாஜ், இந்து மதத்தைச் சேர்ந்த நேகாவை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். பயாஜ், தனது காதலை நேகாவிடம் கூறிய போது அதை நேகா ஏற்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால், நேகா மீது பயாஜ் ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளார்.

ADVERTISEMENT

இந்நிலையில், நேற்று முன் தினம் (20-04-24) வழக்கம் போல் நேகா கல்லூரிக்கு வந்துள்ளார். அப்போது அங்கு வந்த பயாஜ், நேகாவிடம் தனது காதலை ஏற்குமாறு தகராறு செய்து வந்துள்ளார். ஆனால், நேகா, அவரது காதலை திட்டவட்டமாக மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த பயாஜ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, நேகாவை சரமாரியாக குத்தினார். இதி்ல் படுகாயமடைந்த நேகா, ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

அதே வேளையில், கல்லூரி வளாகத்திலேயே மாணவியை குத்தி கொலை செய்துவிட்டு தப்பியோடிய பயாஜை, அங்கிருந்த மாணவர்கள் சுற்றி வளைத்து பிடித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பயாஜ்ஜை கைது செய்து சிறையில் அடைத்தனர். காங்கிரஸ் கவுன்சிலரின் மகள், கல்லூரி வளாகத்திலேயே ஒரு தலைக் காதலால் சக மாணவரால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக, நேகாவின் தந்தையும், கவுன்சிலருமான நிரஞ்சன் தெரிவிக்கையில், ‘லவ் ஜிகாத்தால் தான் தனது மகள் கொலை செய்யப்பட்டுள்ளார்’ எனக் குற்றம் சாட்டினார்.

இதற்கிடையில், ஹுப்பள்ளி மாணவி கொலை வழக்கை குற்றப் புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்க தனது அரசு முடிவு செய்துள்ளதாகவும், அதை விரைந்து முடிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும் என்றும் கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்திருந்தார். அதே வேளையில், கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவியின் தந்தை காங்கிரஸ் கவுன்சிலருக்கு ஆதரவாக இந்த விவகாரத்தை பா.ஜ.க தனது கையில் எடுத்துள்ளது. இந்த சம்பவத்தை ‘லவ் ஜிஹாத்’ எனக் கூறி நீதி வேண்டும் என பா.ஜ.க.வும் இந்துத்துவ அமைப்புகளும் போராடி முழு கடை அடைப்பு நடத்த பந்த்க்கு அழைப்பு விடுத்துள்ளது.

அந்த வகையில், பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, உயிரிழந்த மாணவியின் பெற்றோரை நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார். அதை தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “இந்த சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த கொலை தொடர்பான அரசின் அறிக்கைகள் விசாரணையை சீர்குலைக்கும் வகையில் இருக்கின்றன. திருப்தி அரசியலுக்காக தற்போதைய அரசைக் கர்நாடகா மக்கள் மன்னிக்க மாட்டார்கள்” எனத் தெரிவித்தார்.

மேலும், இந்த விவகாரம் குறித்து கர்நாடகா பா.ஜ.க தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா கூறுகையில், “பா.ஜ.க தொண்டர்கள் தேர்தல் வேலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, பந்தில் கலந்து கொள்ளுங்கள். இந்த சம்பவத்தில் அரசாங்கம் அலட்சியமாக நடந்துகொள்கிறது. சிறுபான்மையினரின் ஆதரவே இந்த அரசாங்கத்தின் முன்னுரிமை” என்று கூறி பா.ஜ.கவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT