BJP new MLA nominated in pondicherry

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில்,ஆளும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் 4 பேர் ராஜினாமா செய்துள்ளனர். காங்கிரஸ் ஆட்சிக்கு கொடுத்த ஆதரவை அவர்கள் விலக்கிக் கொண்டுள்ளனர். ஏற்கனவே ஒரு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை 10 ஆக குறைந்தது. அதேபோல் எதிரணியிலும் என்.ஆர்.காங்கிரஸ் 7, அ.தி.மு.க 4 என 11 பேர் உள்ளனர். அவர்களுடன் பா.ஜ.க நியமன எம்.எல்.ஏக்கள் மூவரை சேர்த்தால் 14 பேர் உள்ளனர்.

Advertisment

ஆளும் காங்கிரஸ் அரசுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் சமமான சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை உள்ளதால், எதிர்க்கட்சிகள் துணைநிலை ஆளுநரைச் சந்தித்து காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வலியுறுத்தினர். அதையடுத்து துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், வருகின்ற 22-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சட்டமன்றத்தைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்கஉத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதற்கு முதலமைச்சர் நாராயணசாமி, "எங்களுக்குப் பெரும்பான்மை உள்ளது. நாங்கள் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்போம். மேலும் நியமன சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வாக்குரிமை இல்லை என்பதே எங்களின் முடிவு" என நேற்று (18.02.2021) இரவு தெரிவித்திருந்தார்.இந்நிலையில் இன்று காலை பா.ஜ.க மாநிலத் தலைவரும், நியமன சட்டமன்ற உறுப்பினருமான சாமிநாதன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

Advertisment

அப்போது அவர் கூறியதாவது, "உச்சநீதிமன்றம், நியமன சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வாக்குரிமை உண்டு என தீர்ப்பளித்துள்ளது. இதனை தலைமை தேர்தல் ஆணையரும் உறுதிப்படுத்தியுள்ளார். அதனால் 22-ஆம் தேதி கூட்டப்படும் சட்டமன்றத்தில் மக்கள் நலன் காக்க அரசுக்கு எதிராக வாக்களிப்போம்" எனத் தெரிவித்தார். மேலும் “வருகிற 25-ஆம் தேதி நடைபெறும் பொதுக்கூட்டத்திற்குபாரத பிரதமர் நரேந்திர மோடி வருகை தர உள்ளார்" என்றும் தெரிவித்தார்.