Advertisment

“பெண்களிடம் வீரம் இல்லை” - பஹல்காமில் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து பா.ஜ.க எம்.பியின் சர்ச்சை கருத்து!

BJP MP Ram chander jhangra creates controversy by criticizing victims about Pahalgam attack; 'Women lack courage' -

Advertisment

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையே உலுக்கியது. இந்த தாக்குதலை நடத்தியது, பாகிஸ்தானில் செயல்பட்டு வந்த பயங்கரவாத அமைப்பு என்பதால் பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளை இந்தியா எடுத்தது.

அதனை தொடர்ந்து, பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்தியா கடந்த மே 7ஆம் தேதி நள்ளிரவு ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தான் ராணுவம் எல்லையை மீறி தாக்குதல் நடத்தியது. இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வந்த நிலையில், அமெரிக்காவின் தலையீட்டு காரணமாக கடந்த 10ஆம் தேதி இந்த தாக்குதல்கள் நிறுத்தப்பட்டது. அதனால், இரு நாடுகளிடையே தற்போது அமைதி நிலவி வருகிறது.

இருப்பினும், இந்த தாக்குதல் தொடர்பாக அரசியல் தலைவர்கள் அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். சில தினங்களுக்கு முன்பு, பயங்கரவாதிகள் முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்திய ஆபரேஷன் சிந்தூருக்கு தலைமையேற்ற கர்னல் சோபியா குரேஷியை பயங்கரவாதிகளின் சகோதரி என மத்தியப் பிரேதச பா.ஜ.க அமைச்சர் குன்வார் விஜய் ஷா பேசியது சர்ச்சையாக மாறியது. இதற்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, விஜய் ஷா மன்னிப்பு கோரினார். இருப்பினும், இது தொடர்பாக மத்தியப் பிரதேச நீதிமன்றம் தாமாக முன் வந்து விஜய் ஷா மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டது.

Advertisment

இந்த நிலையில், பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பெண்களிடம் வீரம் இல்லை என பா.ஜ.க எம்.பி ராம் சந்தர் ஜங்க்ரா பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ராஜ்ய சபா எம்.பியான ராம் சந்தர் ஜங்க்ரா, தேவி அஹில்யாபாய் ஹோல்கர் ஜெயந்தியை முன்னிட்டு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அதில் அவர் பேசியதாவது, “பெண் சுற்றுலாப் பயணிகள் சண்டையிட்டிருக்க வேண்டும். அவர்கள் சண்டையிட்டிருக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன். அவர்கள் போராடியிருந்தால் உயிரிழப்புகள் குறைந்திருக்கும். தங்கள் கணவர்களின் உயிருக்காக மன்றாடுவதற்குப் பதிலாக பயங்கரவாதிகளுக்கு எதிராகப் போராடியிருக்க வேண்டும். அனைத்து சுற்றுலாப் பயணிகளும் அக்னிவீர் பயிற்சி பெற்றிருந்தால், அவர்கள் பயங்கரவாதிகளை சமாளித்து, இறுதியில் உயிரிழப்புகளைக் குறைத்திருப்பார்கள். ராணி அஹில்யாபாய் போன்ற நமது சகோதரியிடம் துணிச்சலின் உணர்வை மீண்டும் தூண்ட வேண்டும்” எனப் பேசினார்.

பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் குறித்தும், ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் நடத்திய ராணுவ அதிகாரிகள் குறித்தும் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்து வருவதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. கடும் எதிர்ப்பை அடுத்து, தான் கூறிய கருத்துக்களுக்கு மன்னிப்பு கேட்பதாக ராம் சந்தர் ஜங்க்ரா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “நான் என் நாட்டுப் பெண்களை எந்த வகையிலும் பலவீனமாக நடத்தவில்லை. பஹல்காம் தாக்குதலில் கணவர்களை இழந்த பெண்களுடன் நாங்கள் நிற்கிறோம், அந்தக் குடும்பங்களுடன் நாங்கள் நிற்கிறோம். இருப்பினும், நான் யாருடைய உணர்வுகளையும் புண்படுத்தியிருந்தால், மன்னிப்பு கேட்பதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை” எனத் தெரிவித்தார்.

controversy Holidays Pahalgam Pahalgam Attack
இதையும் படியுங்கள்
Subscribe