உத்தரகண்ட் மாநிலத்தை சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ பிரணவ் சிங் குடிபோதையில் துப்பாக்கியுடன் நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பத்திரிகையாளரை மிரட்டியதாக சமீபத்தில் பாஜக -விலிருந்து பிரணவ் சிங் இடைநீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் அவர் தனது வீட்டில் மது அருந்திவிட்டு கையில் துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு நடனமாடும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் இந்த வீடியோ குறித்து பேசியுள்ள பாஜக ஊடக தொடர்பாளர் அணில் புலானி, "அந்த வீடியோவை நான் பார்த்தேன். இது கண்டிப்பாக கண்டனத்துக்குரியது. ஏற்கனவே பிரணவ் சிங் மீது இது போன்ற புகார்கள் எழுந்தன. அதனால்தான் அவர் கட்சியிலிருந்து 3 மாதங்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டார். இந்த விவகாரம் குறித்து உத்தரகண்ட் மாநில பாஜக தலைவர்களுடன் பேசி விரைவில் கடுமையான நடவடிக்கை எடுப்போம்" என தெரிவித்துள்ளார்.