
காவல்துறை பெண் துணை ஆணையரை, கர்நாடகா பா.ஜ.க எம்.எல்.சி ஒருவர் பாகிஸ்தானுடன் தொடர்புபடுத்தி பேசியது அம்மாநிலத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநில எதிர்க்கட்சித் தலைவராகப் பொறுப்பு வகித்து சாலவாடி நாரயணசாமி, கடந்த மே 21ஆம் தேதி கலபுராகியின் சித்தாபூரில் உள்ள விருந்தினர் மாளிகைக்கு திரங்கா யாத்திரைக்காக வருகை தந்தார். அப்போது அவர், மாளிகையை விட்டு வெளியேறுவதை காங்கிரஸ் தொண்டர்கள் முற்றுகையிட்டு தடுத்தனர். அப்போது அவர் விருந்தினர் மாளிகையின் உள்ளே அடைக்கப்பட்டார்.
இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 24ஆம் தேதி கலபுரகியில் பா.ஜ.க சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தில் பேசிய பா.ஜ.க எம்.எல்.சி ரவிக்குமார், “கடந்த வாரம் கலபுரகியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையை காங்கிரஸ் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டனர். பாஜக எம்.எல்.சி.யும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான சலவாடி நாராயணசாமியை வெளியே வர அனுமதிக்கவில்லை. கலபுரகியில் உள்ள துணை ஆணையர் அலுவலகம் அதன் சுதந்திரத்தை இழந்துவிட்டது. காங்கிரஸ் சொல்வதை மட்டுமே அதிகாரி கேட்கிறார். கலபுரகி துணை ஆணையர் பாகிஸ்தானில் இருந்து வந்தாரா? அல்லது இங்கு ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியா? என்று எனக்கு தெரியவில்லை. உங்கள் கைத்தட்டலைக் கேட்டப் பிறகு, அவர் பாகிஸ்தானில் இருந்து வந்திருக்கலாம் என்று நினைக்கிறேன்” என்று கூறினார்.
ஐ.ஏ.எஸ் அதிகாரியும், கலபுரகியில் காவல்துறை துணை ஆணையராகவும் பொறுப்பு வகித்து வரும் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த ஃபெசியா தரணத்தை, பாகிஸ்தானில் இருந்து வந்தவர் என்று பா.ஜ.க எம்.எல்.சி பேசியிருப்பது தற்போது சர்ச்சையாக மாறியுள்ளது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். கர்நாடக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சங்கம், ரவிக்குமாரின் கருத்துகளைக் கண்டித்து, பாஜக சட்டமன்ற உறுப்பினர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரியுள்ளது. இதனை தொடர்ந்து, பாஜக எம்.எல்.சி ரவிக்குமார் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வன்கொடுமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆபரேஷன் சிந்தூரை தலைமையேற்று நடத்திய கர்னல் சோபியா குரேஷியை, பயங்கரவாதிகளின் சகோதரி என்று மத்தியப் பிரதேச பா.ஜ.க அமைச்சர் குன்வார் விஜய் ஷா பேசியது நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அரசியல் கண்டனத்தைத் தவிர, பாஜக அமைச்சரின் கருத்துக்காக மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் அவரைக் கண்டித்தது என்பது குறிப்பிடத்தக்கது.