“கேரளாவில் பசுவதையை நிறுத்தாவிட்டால்...” - பா.ஜ.க தலைவரின் சர்ச்சை பேச்சு

BJP leader's controversial speech about kerala Landslide

கேரளா மாநிலம், வயநாடு மாவட்டம் முண்டக்கை என்ற பகுதியில் தொடர் கனமழையால் கடந்த ஜூலை 30ஆம் தேதி பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. மேலும், சுமார் 2 கி.மீ தொலைவில் சூரல்மலை என்ற இடத்திலும் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த இரு நிலச்சரிவில் சுமார் 500 வீடுகள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிக்கி உள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகி இருந்தது. இந்த நிலச்சரிவு ஏராளமானோர் உயிரிழந்து இந்தியாவையே உலுக்கியுள்ளது.

நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் முப்படையைச் சேர்ந்த வீரர்கள், பேரிடர் மீட்புப்படையினர் உள்ளிட்ட வீரர்கள் ஐந்தாவது நாளாக இன்றும் (03.08.2024) மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 344ஆக உயர்ந்துள்ளது. மேலும் முண்டக்கை, சூரல்மலை மற்றும் மேப்பாடி ஆகிய இடங்களில் மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதே சமயம் முண்டக்கை பகுதியில் அமைக்கப்பட்ட இரும்பு பாலம் வழியாக பல்வேறு உபகரணங்கள் கொண்டு சென்று மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில், ராஜஸ்தான் மாநில முன்னாள் எம்.எல்.ஏவும், பா.ஜ.க கட்சியின் மூத்த தலைவருமான கியான்தேவ் அஹுஜா என்பவர், வயநாடு நிலச்சரிவை, பசுவதை நடைமுறைகளுடன் தொடர்புபடுத்தி பேசி சர்ச்சையை கிளப்பியுள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப்பேசுகையில், “வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவுகள் பசு வதையின் நேரடி விளைவு. உத்தரகாண்ட் மற்றும் இமாச்சலப் பிரதேசம் போன்ற பகுதிகளில் மேக வெடிப்புகள் மற்றும் நிலச்சரிவுகள் போன்ற இயற்கை பேரிடர்கள் அடிக்கடி நிகழ்கின்றன. இருப்பினும் அவை இந்த அளவிலான பேரழிவுகளை ஏற்படுத்தாது.

கடந்த 2018 ஆம் ஆண்டு முதல், பசு வதையில் ஈடுபடும் பகுதிகள் இத்தகைய சோகமான சம்பவங்களை எதிர்கொள்வதை நாங்கள் அவதானித்து வருகிறோம். கேரளாவில் பசு வதையை நிறுத்தாவிட்டால் இதுபோன்ற அவலங்கள் தொடரும்” என்று கூறினார். இவரது பேச்சு தற்போது சர்ச்சையாகி வருகிறது.

controversy Kerala
இதையும் படியுங்கள்
Subscribe