இந்தியா முழுவதும் நாடாளுமன்ற தேர்தலும், சில மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தலும் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இதற்கான வெட்பாளர்கள் பட்டியலை அனைத்து கட்சிகளும் வெளியிட்டு வருகின்றது. அந்த வகையில் பாஜக வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.

அதில் பிரதமர் மோடி மறுபடியும் வாரணாசி தொகுதியில் போட்டியிட போவதாகவும், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் லக்னோ தொகுதி, நிதின் கட்கரி, ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகம் அமைந்துள்ள நாக்பூர் தொகுதி, ஸ்மிருதி இரானி மீண்டும் உத்தர பிரதேசத்தின் அமேதி தொகுதியில் ராகுல் காந்தியை எதிர்த்தும், அமித் ஷா குஜராத்தின் காந்திநகர் தொகுதியில் போட்டியிடப்போவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1998 ஆம் ஆண்டு முதல் 2014 தேர்தல் வரை காந்திநகர் தொகுதியில் அத்வானி தான் வெற்றி பெற்று வருகிறார். கிட்டத்தட்ட பாஜக வின் கோட்டையாக உள்ள அந்த தொகுதியில் அமித் ஷா தனது முதல் மக்களவை தேர்தலை எதிர்கொள்கிறார். இதுவரை அமித் ஷா 5 முறை சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிட்டு இருந்தாலும், அவர் மக்களவைக்காக போட்டியிடுவது இதுவே முதல் முறை.
கடந்த 2014 ஆம் ஆண்டும் அவர் மாநிலங்களவை எம்.பி யாகவே தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் கடந்த 2014 ஆம் ஆண்டு தேர்தலில் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அத்வானி வெற்றி பெற்ற தொகுதியில் இந்த முறை அமித் ஷா வெற்றி பெறுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதேவேளையில் அத்வானியின் தொகுதியை பறித்து அமித் ஷாவிடம் கொடுத்து விட்டதாக பிரதமர் மோடி மீது எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.