
உத்தரப்பிரதேச மாநிலம், ஜான்பூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரமோத் யாதவ். இவர் பா.ஜ.க. விவசாய சங்க மாவட்டத் தலைவராகப் பொறுப்பு வகித்து வந்தார். இந்த நிலையில், பிரமோத் யாதவ் இன்று (07-03-24) காலை தனது வீட்டிலிருந்து வெளியே செல்வதற்காகக் காரில் சென்று கொண்டிருந்தார்.
போதாபூர் பகுதி வழியே பிரமோத் யாதவ் சென்று கொண்டிருந்தபோது, அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள், பிரமோத்தின் காரை வழிமறித்துள்ளனர். அப்போது, அந்த மர்ம நபர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால், பிரமோத்தை நோக்கி சரமாரியாக சுட்டனர். இதில், படுகாயமடைந்த பிரமோத் ரத்த வெள்ளத்தில் கீழே மயங்கி விழுந்தார். இதனையடுத்து, அந்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர்.
இதனைக் கண்ட அங்கிருந்தவர்கள், உடனடியாக பிரமோத்தை மீட்டு அருகே உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பிரமோத்தை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில், விரைந்து வந்த போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பிரமோத் கொல்லப்பட்ட இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து கொலையாளிகள் விவரம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில், பா.ஜ.க தலைவர் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.